அம்மாவுக்கு ஓர் அவசரக் கடிதம்

மிழர்களில் டீவி செய்திகள் பார்ப்பவர்களை சில வகைமைக்குள் பிரிக்கலாம். சன் டீவி செய்தி பார்ப்பவர்கள், கலைஞர் டீவி செய்தி பார்ப்பவர்கள், ஜெயா டிவி செய்தி பார்ப்பவர்கள், தூர்தர்ஷன் செய்தி பார்ப்பவர்கள், ஆங்கில செய்தி சேனல்கள் பார்ப்பவர்கள், இதர டீவி செய்தி பார்ப்பவர்கள். இதில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி செய்திகளை மட்டுமே பார்ப்பவர்கள் அந்தக் கட்சிகளின் ஆதரவாளர்களாக இருப்பதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.

நான் ஒரு எத்திஸ்ட் என்பதனால் எந்தக் கட்சியையும் தொழாதவன் என்கிற தைரியத்தில் இந்த வகைமைகளுக்குள் ஒருபோதும் அடங்குவதில்லை. காலை ஏழு மணியிலிருந்து எட்டேகால் வரைக்கும் செய்திகள் பார்ப்பது மற்றும் கேட்பது என் வழக்கம். ஏழுமணிக்கு டீ கப்போடு பேப்பரை விரித்துக்கொண்டு ஹாலில் உட்காரும்போது ஜெயா செய்திகள் ஆரம்பித்திருக்கும். அது முடிய முடிய ஏழரைக்கு சன் செய்திகள். கலைஞர் செய்திகளும் இதே நேரத்தில்தான் ஒளிபரப்பாவதால் பழக்க தோஷத்தால் சன்செய்தி பார்ப்பதை மாற்றிக்கொள்ள முடியவில்லை. விளம்பர இடைவெளிகளில் மட்டும் கலைஞருக்குத் தாவுவது உண்டு. அது முடியும்போது தூர்தர்ஷன் செய்திகள். இது தினந்தோறும் நிகழ்வது. காலை ஜெயா தலைப்புச் செய்தியிலேயே ஏதாவது தேசிய அல்லது விதேசிய அளவில் பேரிடர் முதலான முக்கியச் செய்திகள் இருப்பின், எல்லாவற்றையும் துறந்துவிட்டு டைம்ஸ் நௌ, என்டிடீவி 24×7, ஹெட்லைன்ஸ் டுடே, சீயென்னென், பிபிஸி வேர்ல்ட் நியூஸ் என்று தாவிக்கொண்டிருப்பேன். (பேரிடர் என் வீட்டுக்கே வந்துவிட்டால் டீவியையே துறந்துவிட்டு வீதிக்கு ஓடும் கூட்டத்தில் நானுமிருப்பேன் என்பது வேறு விஷயம்!)

துர்தினங்களை விடுங்கள். சாதாரண தினங்களில் நடக்கிற கூத்தை மட்டும் பார்க்கலாம். சன்டீவி செய்திகளைப் பற்றியோ தூர்தர்ஷன் செய்திகளைப் பற்றியோ பெரிதாய் விஸ்தரிப்பதல்ல இந்தக் கட்டுரையின் நோக்கம் என்பது தலைப்பிலிருந்தே உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனாவுக்கு ஆனா சரியாக வருகிறதே என்றுதான் அம்மாவுக்கு ஓர் அவசரக் கடிதம் என்று தலைப்பிட்டேனே தவிர, உண்மையில் இது ஜெயாடீவிக்கு ஓர் அவசரக் கடிதம் என்பதே உண்மை.

வழக்கமாக சன்டீவியில் முக்கியமான செய்தி ஏதும் இருந்தால் அதை முதலில் காட்டி சுருக்கமாக முடித்துவிட்டு நாடு எவ்வளவு சுபிக்ஷமாக இருக்கிறது என்பதையும், முதல்வரின் அறிக்கைகளையும், துணை முதல்வரின் முழக்கங்களையும், மொத்தம் முப்பது நிமிடம் செய்திக்கான நேரம் என்றால் அதில் இருபது நிமிடம் விளம்பரங்களையும் காட்டிவிட்டு வணக்கம் என்று முடித்துக்கொண்டு போய்விடுவார்கள்.

ஆனால் ஜெயாடீவியில் முக்கிய செய்திகள்கூட பின்னுக்குத் தள்ளப்பட்டு ஏதாவதோர் ஊராட்சி ஒன்றியத்தின் தலைவி, ஏதாவது ஒரு மாவட்டத்தின் மேயர் என்று யாரையாவது பிடித்துக்கொண்டு ஊழல் குற்றச்சாட்டை முழம் முழமாக வாசித்து இதனால் மைனாரிட்டி திமுக அரசு உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்படவேண்டும் என்கிற பல்லவிதான் முதல் கட்ட ஏற்பாடு.

அதிலும் ஓர் ஒழுங்கு உண்டு. அம்மாவின் அறிக்கையாகவே அது வெளிப்படும் என்பதனால் அம்மாவின் புகைப்படத்தை இடப்பக்கம் போட்டு வலதுபக்கம் வரிகளாக வந்துகொண்டேயிருக்கும் அறிக்கை. பேகிரவுண்டில் கடுமையான கோபத்திலிருக்கும் ஆண் குரல் அதை வாசித்துக்கொண்டுவேறு இருக்கும். இந்த மாதிரி செய்தால் ஆரம்பத்திலேயே செய்தி பார்ப்பவனுக்கு போரடிக்காதா; இதையெல்லாமா அம்மா சொல்வதாகப் போடுவது; அம்மா லெவலுக்கு முதல்வரோடு சண்டை போடாமல் இந்த ஊராட்சி ஒன்றியத்திடமெல்லாம் சண்டை போட்டுக்கொண்டிருப்பதைப் போன்ற தோற்றத்தையல்லவா இது உருவாக்குகிறது என்றெல்லாம் ஆதங்கப்படுவதல்ல என் நோக்கம். ஏனென்றால் என்னைப்போன்ற சிலரைத் தவிர கட்சிக்காரர்கள்தான் அதைப் பார்க்கப்போகிறார்கள் என்பதனால் ஆபத்தொன்றுமில்லை.

ஆபத்து அதைத் தொடர்ந்துதான் வருகிறது. ஏற்கனவே ஆளுங்கட்சிக்கு ஆதரவாக உள்ள சேனல்கள் அனைத்தும் அரசாங்கத்தின் துதி பாடிக்கொண்டிருக்கும் வேளையில் எதிர்க்கட்சி சேனலின் வசைமொழி ஏற்கக்கூடியதுதான் என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் அரசாங்கமே வழங்கிய டீவிப் பெட்டிகளிலும் தாங்கள் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த டீவிப்பெட்டிகளிலும் புதைந்து கிடக்கும் செம்மொழிச் செம்மல்கள் அதற்கு வெளியே என்ன நடக்கிறது என்பதைக்கூட அறியாதவர்களாகவே மூளைச் சலவை செய்யப்படுகிறார்கள் என்கிற பொதுவான ஆதங்கத்தை வெகுசிலரே வெளிப்படுத்தக்கூடிய நிலைப்பாடே இன்று நிலவுவது.

எதிர்க்கட்சி என்று ஒன்று இல்லவே இல்லை என்பதைப் போன்ற தோற்றமே இப்போது பொதுவாக ஏற்படுத்தப்படுகிறது. இந்த முனைப்பில் ஆளுங்கட்சி மட்டுமல்ல, எதிர்க்கட்சியின் பங்கும் இருக்கிறது என்பதே பத்திரிகையாளர்களின் ஆதங்கமாகவும் இருக்கிறது.

அம்மாவை அணுகவே முடிவதில்லை. அவர் போயஸில் இருக்கிறாரா, கொடநாட்டில் இருக்கிறாரா, பையனூரில் இருக்கிறாரா என்பதே தெரிவதில்லை. தலைமைக் கழகத்துக்கு வருவதில்லை, நான் எங்கே இருந்தாலும் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறேன் என்று அறிக்கை மட்டும் விட்டால் போதுமா என்பதாகவெல்லாம் அவரது கட்சிக்காரர்களே புலம்ப ஆரம்பித்து விட்ட சூழலில்தான் ஆளுங்கட்சி சேனல்களில் அனுதின வைபவமாக புதிதாக ஒரு செய்தி சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.

‘நேற்றைக்கு அந்தக் கட்சியிலிருந்து இத்தனைபேர் இங்கு வந்து சேர்ந்தார்களல்லவா, இன்றைக்கு அதைவிட அதிகமாக இத்தனை பேர் வந்து சேர்ந்தார்கள் என்பதை சந்தோஷத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம். அங்கே மரியாதை இல்லாததால் இங்கே வந்தோம், அங்கே நம்பிக்கையை இழந்ததால் இங்கே வந்தோம் என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள்’ என்பதாக தினந்தோறும் செய்திகளை ஆளுங்கட்சியின் சேனல்கள் ஒளிபரப்பி வருகின்றன. இதற்கு எதிராக ஆளுங்கட்சியிலிருந்து எத்தனை பேர் எங்கள் கட்சிக்கு வர இருக்கிறார்கள் என்கிற பட்டியல் என்னிடம் தாயாராக இருக்கிறது என்று அம்மா சொன்னதை ஞாநி கூட நையாண்டி செய்திருந்தார். அதாவது, ஆளுங்கட்சிக்கு எதிராக தைரியமாக எழுதுபவர் என்று பெயர் வாங்கிய அவர்கூட இந்த இடத்தில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக மொழியவேண்டிய அவசியத்தைத்தான் அம்மா இதன்மூலம் ஏற்படுத்திவிட்டார் என்பதாகவே சொல்லத் தோன்றுகிறது.

இந்த நிலைப்பாட்டில்தான் ஜெயாடீவியின் தவறு என்பதாக நான் கருதும் ஒன்றை இங்கே முன்வைக்க விரும்புகிறேன். ஜெயா செய்திகளில் தவறாமல் இடம்பெறும் ஓர் அம்சம், மரணமடைந்த கட்சிக்காரர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் சடங்கு. இறந்தவர்களின் ஊரையும் பேரையும் சொல்லி, மரணமடைந்தவர்களின் ஆன்மா எல்லாம் வல்ல இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்கள் தெய்வத்திடம் வேண்டிக்கொண்டதாகக் குறைந்தபட்சம் ஐந்தாறு பெயர்களாவது தினந்தோறும் குறிப்பிடப்படுகின்றன.

இறந்துபோன கட்சிக்காரர்களுக்கு இரங்கல் தெரிவிக்கிற அக்கறை போற்றத்தக்கதுதான். ஆனால் அதை செய்திகளில்தான் தெரிவிக்கவேண்டுமா என்பதுகூட என் கேள்வியல்ல. ஏற்கனவே கட்சியிலிருந்து கொத்துக் கொத்தாக வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள் என்கிற தோற்றம் ஏற்படுத்தப்பட்டுவரும் சூழலில் இந்த இரங்கல் செய்திகள் எந்த மாதிரியான எண்ணத்தை பார்வையாளர்களின் மனத்தில் ஏற்படுத்தும் என்பதை மட்டும்தான் யோசித்துப் பார்க்கச்சொல்கிறேன்.

அதாவது… இதையே ஆதாரமாகக் கொண்டு, ‘பாதிப்பேர் போய்விட்டார்கள் மீதிப்பேர் செத்துக்கொண்டிருக்கிறார்கள்’ என்று நாளைக்கே கலைஞர், உடன்பிறப்புக்குக் கடிதம் எழுதமாட்டார் என்பது என்ன நிச்சயம் என்பதே எனது கேள்வி.

இரங்கலை நேரில் தெரிவியுங்கள், தொலைபேசியில் தெரிவியுங்கள், அந்தப் பகுதியைச் சார்ந்த கட்சிக்காரர்களைக் கொண்டு தெரிவியுங்கள். பகிரங்கமாத் தெரிவித்து இந்தமாதிரியான எண்ணவோட்டத்தை எதற்காகச் சுண்டிவிடுகிறீர்கள் என்பதே எனது வருத்தம்.

ஆளுங்கட்சி சிறப்பாக செயல்படவேண்டுமானால் எதிர்க்கட்சி பலமாக இருக்கவேண்டும் என்கிற பொதுவான அக்கறையே இந்தமாதிரி எழுத வைக்கிறது. இருந்தாலும் ஆட்டோ சத்தம் கேட்டாலே பகீரென்று இருக்கிறது.

7 thoughts on “அம்மாவுக்கு ஓர் அவசரக் கடிதம்

  1. ஊடகங்களில் செய்தி அரசியல் குறித்த தெளிவான பார்வையை உங்களில் இந்த பதிவு வெளிப்படுத்தியுள்ளது.நடுநிலை விமர்சனம் .சிறப்பு சுதேச

  2. Am i sorry i dont agree that you are neutral. The Sun TV did the same thing that Jaya TV is doing now. But you did not blog about that when they were doing.

    Its human nature that those who start their statement that they are neutral arent neutral at all.

    1. என் நடுவுநிலைமை பற்றியதோ, மணிவண்ணன் சொல்லிருப்பது போல ஊடகங்களில் செய்தி அரசியல் குறித்த தெளிவான பார்வையை வெளிப்படுத்துவதோ அல்ல இந்த கட்டுரை. இதை யாருமே சரியாக புரிந்துகொள்ளவில்லை என்கிற வருத்தமே மேலிடுகிறது.

  3. என் நடுவுநிலைமை பற்றியதோ, மணிவண்ணன் சொல்லிருப்பது போல ஊடகங்களில் செய்தி அரசியல் குறித்த தெளிவான பார்வையை வெளிப்படுத்துவதோ அல்ல இந்த கட்டுரை. இதை யாருமே சரியாக புரிந்துகொள்ளவில்லை என்கிற வருத்தமே மேலிடுகிறது.

  4. Pingback: DARRYL

Leave a comment