48. அப்பாவின் கவிதைகள்

ப்பாவின் கவிதை புதுக்கவிதை.
அப்பா சீர் அடி தளை முதலான
மரபுகளை அறிந்திருக்கவில்லை.
அல்லது மரபுகள் இருந்தன என்று மட்டும்
அறிந்திருந்தார்.

*

அப்பாவின் கவிதை வரிகளின் நீளம்
வரிக்கு வரி மாறுபட்டுக்கொண்டிருந்தது.

*

என் நண்பர்களின் அப்பாக்களின் கவிதைகளில்
ஏதானும் ஒரு குறைந்தபட்ச மரபாவது இருந்துவந்தது.
அப்பாவின் கவிதைகளில்
ஒரு நாட்டுபுறச் சந்தம்கூட இருக்கவில்லை.
ஆனாலும் அப்பாவுக்கு ஒரு வாசகர் குழாம் இருந்தது.

*

அற்புதமான கவிதைகளை வாசித்துவிட்டு
வருத்தம் சுமந்து
படியிறங்கிப் போய்க்கொண்டிருந்தவர்கள் மத்தியில்
அப்பாவின் கவிதைகளுக்கு
கரவொலி விண்ணைப் பிளந்துகொண்டிருந்தது.

*

எனக்கு இரண்டிலொன்று தெரிந்துகொள்ள
ஆவல் எழுந்துவிட்டது.
அப்பாவின் கவிதைகள்
அவர்களின் அற்புதமான கவிதைகளைவிடவும் அற்புதமானவையா?
அல்லது
வாசகனின் தரம் அல்லது ரசனை மாறுபட்டுவிட்டதா?

*

அப்பாவின் கவிதைகள்
இயல்பான பேச்சுக்கள் போல இருப்பதாக
அவர்கள் சொல்லிக்கொண்டிருக்க,
இயல்பின் ஆபாசம்
அவரது கவிதைகளில் வழிந்துகொண்டிருந்தது.

*

அதனால்
தன் குழந்தைகள் அறிந்துகொள்ளக்கூடாது என்கிற பயத்தில்
அவரது கவிதை நோட்டுக்கள் சிலவற்றை
அவர் மறைத்து வைத்திருந்தார்.
அந்தக் கவிதைகளை நான்
கடைசிவரைக்கும் வாசிக்கவில்லை.
என்றாலும்
அவரது அச்செய்கையின் ஆபாசம்
அந்த நோட்டுக்களின் உள்ளடக்கத்தை
விளக்கப் போதுமானதாய் இருந்தது.

*

இப்போது
அப்பாவின் வாழ்வெனும் அக்கவிதைகள்
எனக்கு விளங்கிவிட்டிருக்க
என் சந்தேகம் தீர்ந்துவிட்டிருந்தது.

*

இரண்டிலொன்று புரிந்துவிட்டது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s