22. அப்பாவின் தொடர்புகள்

தாவரவியல் பூங்காவின்
அந்நிய தேயத்து மலர்களின் மத்தியில்
தெலுங்கர்கள்,
எப்போதோ மீசை முளைவிட்ட பருவத்தில்
ஒற்றைப் படத்தில் தலைகாட்டித்
தமிழர்கள் தற்போது முகம் மறந்துபோயிருந்த
– அவர்களின் அற்புத நடிகனையும்
அன்றைய தினக் கதாநாயகியையும்
அவர்கள் அடுத்தவரறியாமல்
செய்யவேண்டிய காரியங்களையும்
அத்தனைபேர் மத்தியில்
படம் பிடித்துக்கொண்டிருந்தார்கள்…
*
அடுத்த ஷாட்டுக்குப் பாதையோர பெஞ்ச்சைத் தீர்மானித்து
காமிராவை ஒருவன் தலையில் சுமந்துகொண்டு போக,
நடிகனும் அத்திசையில் நடந்துகொண்டிருந்தான்…
*
அத்தனை கூட்டத்தில்
அப்பாவுக்குத்தான் அவன் கையைக் குலுக்கி
எப்போதோ அவன் நடித்த அந்த ஒற்றைப் படத்துக்கு
இப்போது வாழ்த்துச் சொல்ல தைரியம் இருந்தது.
*
சென்னைக்குப் போகிற பெட்டியில்
அரிதாரம் மிரட்டிய மிரட்டலில்
அனாவசியமாய் ஒன்றுக்குப் போகிற சாக்கில்
– இல்லாவிட்டால் இந்தப் பக்கம் வந்திருக்க மாட்டேன் என்று
முகக்குறி உணர்த்தும்  என்று நம்பிக்கொண்டு
தமிழ்ப்படங்களில் நிரந்தர
விடுதித்தலைவியாய்ப் பண்ணிக்கொண்டிருந்த
முதிர்கன்னியை
கவனித்து நடந்துகொண்டிருந்தவர்கள் மத்தியில்
அப்பாவுக்கு மட்டுந்தான்
என் பசங்களுக்கு உங்க நடிப்புன்னா உயிர் – என்று
எங்களை உபயோகித்துப்
பேச்சுக் கொடுக்கத் தைரியம் இருந்தது…
*
அப்போதெல்லாம்
அறியாதவரையும் கவரும் வசியம்
எங்கும் தண்ணீர் லாரியாய்க் கசிந்துகொண்டு
அவர்கள் அறிந்திருந்த அப்பா,
இப்பொழுது
தன் மூப்பின் மௌனத்துள் குரல் நீட்டி
பால்ய காலங்களைப் பேச்சின் தொலைநோக்கியில்
பார்த்துக்கொண்டிருந்த திருவாரூர் அத்தை
நீ உம்முன்னிருக்கவா உன்னைப் பாக்க வந்தேன்? – என்றபோது
சம்பாஷணையில் பெரிதும் பங்குபெறப்போகிற
முஸ்தீபுகளின் முடிவில்
வாய்திறந்து, என்ன பேசறது? – என்றார்.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s