விளக்கணைச்ச நேரத்திலே…

புவி வெப்பமாகவும் கூடாது, குளிர்ந்துவிடவும்கூடாது என்றால் நம்மால் என்னதான் செய்ய முடியும்? நல்ல லட்டு மாதிரியான பீரியடையெல்லாம் நம் முன்னோர்கள் வாழ்ந்துவிட்டுப் போய்விட்டார்கள். அவர்களைப் பொருத்தவரைக்கும் எந்தக் குழப்பமுமில்லாமல் பகலென்றால் வெளிச்சமாகவும் இரவென்றால் இருட்டாகவும் இருந்து வந்தது. நிம்மதியாக இருந்தார்கள். உன் செய்கையால் பூமியின் ஆதாரக் கட்டமைப்பே பாதிக்கப்படுகிறது என்று ஒரு குரங்கையோ முதலையையோ எப்படி குற்றஞ்சாட்ட முடியாதோ அதே மாதிரிதான் இந்த முன்னோர்களையும் நம்மால் கடிந்துகொள்ள இயலாது. ஏனென்றால் அவர்களுக்கு இப்படியெல்லாம் சில பிரச்சனைகள் வரப்போகின்றன என்பது தெரியாது.

இவர்களில், கிடைத்த பெண்களையெல்லாம் ஆண்களும் கிடைத்த ஆண்களையெல்லாம் பெண்களும் புணர்ந்துகொண்டு, குடும்பம் என்கிற கட்டமைப்புக்குள்கூட வராத நிலையில் இருந்தவர்களைப் பார்த்து இன்னும்கூட நான் பொறாமைப்படுகிறேன். புணர்ச்சி, ஆகாரத் தேட்டம், வேட்டையாடல், விளையாடல் ஆகியவற்றால் உலகம் உயிர்த்திருந்ததே தவிர அழிந்துபடவில்லை.

இந்த அற்புதங்களையெல்லாம் விட்டுவிட்டு பகலில் இருளும் இரவில் வெளிச்சமும் வேண்டும் என்று எப்போது மனிதன் யோசிக்க ஆரம்பித்தானோ அப்போதே முளைத்துவிட்டது பிரச்சனை. மனிதனுக்கல்ல, பூமிக்கு. ஏனென்றால் இயல்பை மீறுவது பூமிக்குப் பிடிக்காது. என் அந்தரங்கத்தை யாராவது தோண்டிப் பார்க்க முனைந்தால் எனக்கே பிடிக்காது என்கிறபோது, அகழ்வாரைத் தாங்கும் நன்னிலம் ஏன் பொங்கியெழக்கூடாது? இதன்வாயிலாக நாம் புரிந்துகொள்ள வேண்டியது ஒன்றுதான், நிற்பன, நடப்பன, பறப்பன, ஊர்வன யாவும் நிலத்தன. மனிதகுலம் எனும் கனவில் மிதப்பனதான் நிலத்தைக் கெடுத்தன.

ஒவர் தமிழால் நீங்கள் சோர்வடைந்திருக்கலாம் அல்லது சிலிர்ப்படைந்திருக்கலாம், போரடிக்காமல் விஷயத்துக்கு வருகிறேன், மார்ச் 28 புவி வெப்பமடைவதையெதிர்த்து புத்தியும் ஹ்ருதயமும் உள்ள மனிதர்களைத் திரட்ட உலகளாவிய முனைப்பு செயல்படும் தினம் என்பதாக கடந்த வருடமே ஓர் அறிவிப்பை எதிர்கொண்டேன். அதன்படி அந்த நாளில் இரவு எட்டரை மணியிலிருந்து ஒன்பதரை மணி வரைக்கும் எர்த் அவர் என்பதாக அறிவிக்கப்பட்டு, அந்த நேரத்தில் அத்தியாவசியமல்லாத சுவிட்சுகளை அணைக்கவேண்டும் என்பது கட்டளையல்ல, கோரிக்கை. கடந்த வருடம் கலைஞர் கருணாநிதியின் தலைமையில் தள்ளாடும் அல்லது பட்டையைக் கிளப்பும் தமிழகம் எனும் நிலப்பிரதேசம் அதில் கலந்துகொள்ளவில்லை. ஏனென்றால் இந்தமாதிரி மின்னணைப்பு வைபவம் எல்லாம், மின்சாரத்தை ஒருபோதும் அணைக்காத போதமுள்ள தேசங்களுக்கு மாத்திரமே வெல்லமாக இருக்க முடியுமே தவிர, கலைஞரின் விக்டிமாக விடிந்திருக்கிற ஆற்காடார் தலைமையில் வீக்கான வோல்ட்டேஜில் மின்வெட்டும் நள்ளிரவு கும்மிருட்டும் துள்ளிவிளையாடும் தமிழ்த்தேயம் போன்ற ஏரியாக்களில் வெறும் விளையாட்டாகவே ஏற்றுக்கொள்ளப்பட முடியும்.

ஆனாலும் ஆஸ்திரேலியக் கண்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கம் எப்படியோ கடலில் விழுந்து நீந்தியோ, ஃபேக்ஸ் மெஷினில் புகுந்து புறப்பட்டோ, ஊடகத்தால்தான் ஊடுருவியோ இங்கே வரைக்கும் வந்துவிட்டது. போன வருஷமே இந்தியத் துணைக்கண்டத்தின் வட இந்திய நகரங்களில் இந்த அனுசரிப்பு நிகழவே செய்தது. இந்த வருடம் அதைத் தமிழ் கூறும் நல்லுலகும் ஏற்றுக்கொண்டுவிட்டது. ஆக, ஒவ்வொரு இந்தியனின் தலையிலும் சுமத்தப்படும் உலக வங்கிக் கடன் போல வருடம் ஒருநாள் ஒரு மணிநேரம் அவர்களாக நிறுத்தாமல் நாமாக மின்சாரத்தை நிறுத்த ஒரு நல்வாய்ப்பு நமக்கு வழங்கப்பட்டது. இது கிட்டத்தட்ட ஈபி எனப்படும் எலக்ட்ரிசிடி போர்டு இயக்குனர் பதவிக்கு ஒப்பானது என்பதனால் இதை நாம் அனுசரிக்க வேண்டிய கட்டாயத்தை நாமும் உணர்ந்துகொண்டோம்.

அவர்கள் குறிப்பிட்டிருந்த நேரத்தில் கலைஞர் கருணாநிதியின் வீட்டில் இருள் சூழ்ந்திருந்ததை அடுத்தநாள் நாம் ஊடகம் வாயிலாகப் பார்த்தோம். ஒருமணிநேரம் கவிதை அல்லது கழகக் கண்மணிகளுக்கான கடிதம் எழுத முடியாத நிலைமையில் அவர் தள்ளப்பட்டது தமிழுக்கு நல்லது என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்களும், அது தமிழே ஸ்தம்பித்த ஒரு மணிநேரம் என்பதாக அனைத்திந்திய திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்களும் கருதும்படியாக ஆகிவிட்டது. அதாவது புவிக்கு ஒன்றேல் இரட்டை லாபம், அன்றேல் இரட்டை நட்டம்.

அவர் வீடு மாத்திரமல்ல, பாராளுமன்றம், இந்தியா கேட் என்று தொடங்கி நாடெங்கும் பல்வேறு இடங்களில் விளக்ணைந்ததை விமரிசையாக ஊடகங்கள் காட்டின. இதனால் நாம்தான் விளக்கணைக்காமல் விட்டுவிட்டோமோ என்று பலரும் வருந்தநேரும் என்பதாக அவர்கள் எண்ணமிட்டிருக்கலாம். அடுத்த வருடம் இதற்கான பர்ஸன்டேஜை உயர்த்த இந்த உள்மனக் கிலேசம் உதவக்கூடும் என்பதும் உண்மையாக இருக்கலாம். ஆனால் அதைப்பற்றி எனக்கு அக்கறையில்லை. ஏனென்றால் அயாம் நாட் கில்ட்டி.

அதாகப்பட்டது, ஒழுங்கு மரியாதையாக அந்த நேரத்தில் விளக்கணைத்த புவி விரும்பிகளில் நானும் ஒருவன். சாதாரணமாக இந்தமாதிரி விஷயங்கள் எல்லாம் கட்டாயமாக்கப்பட்டால் அதை எதிர்க்கிற முனைப்பில் திரிகிற பழக்கம் உள்ளவன் என்பதால், அரசாங்கம் கட்டளையிடாமல் கோரிக்கை வைக்கும்போது அதை ஒழுகவேண்டியது கடமை என்பதாக நான் அதை அனுசரித்தேனா, உண்மையிலேயே உலகம் வெப்பமயமாவதை என்னாலான அளவு தடுக்கப்போகிற முனைப்பை உடையவனா நான் என்பதையெல்லாம் நீங்கள்தான் சொல்ல வேண்டும். நான் நடந்ததை மட்டும் சொல்கிறேன். (உதாரணமாக இதற்கு அடுத்தநாள் மஹாவீர் ஜெயந்தி என்பதால் புலாலும் மதுவும் விற்பதற்கு தடை இருந்த காரணத்தால் கனஜரூராய்க் கிளம்பிப்போய் ரகசியமாக இரண்டையும் வாங்கி வந்து சமைத்து உண்ணவும் கலந்து அருந்தவுமாய் இருந்தவன்தான் இதை எழுதிக்கொண்டிருப்பவன் என்பதை நீங்கள் மனதிற்கொள்ளலாம்).

சாதாரணமாக இரவு ஒன்பதரையிலிருந்து பத்துக்குள் வாசல் விளக்கை அணைத்துவிட்டு கதவுகளைப் பூட்டுவது வழக்கம் என்பதனால் இந்த எட்டரை டு ஒன்பதரை வைபவத்தை முன்னிட்டு எட்டு இருபதுக்கே அதைச் செய்து விட்டு இரண்டு மெழுகுவர்த்திகளையும் ஹாலில் ஏற்றி வைத்துக்கொள்வது என்பதாக தீர்மானித்திருந்தேன். அதாவது அநாவசியம் என்பதாக தோன்றுகிற அத்தனை சுவிட்சுகளையும் அணைப்பது நோக்கம். அப்படியானால் முதலில் அணைக்க வேண்டியது டீவி. அடுத்தது கம்ப்யூட்டர், மூன்றாவது விளக்குகள். தேவைப்பட்டால் ஃபிரிட்ஜ். வெய்யில் காலம் என்பதால் கடைசியாகத்தான் ஃபேன். இந்த ஆர்டரில் ஒழுங்காக ஒவ்வொன்றாக செய்துகொண்டு வந்தேன். படுக்கையறையில் ஒரு மணிநேரம் முன்பாகவே ஏஸியை ஓடவிட்டுவிட்டு இந்த ஒரு மணிநேரத்தில் அணைத்துவிட்டால் அறை கூலாக இருக்குமே என்று ஓடிய குறுக்கு புத்தியை செருப்பால் அடித்துவிட்டு சரியாக எட்டரைக்கு ஃப்ரிட்ஜ் வரைக்கும் அணைக்கப்பட்டுவிட்டதா என்பதைப் பார்த்துவிட்டு ஒழுங்காக ஹாலில் வந்து சம்பிரதாயமாக தரையில் உட்கார்ந்துகொண்டேன்.

மெழுகுவர்த்தி வெளிச்சமும் அவை அணையாத அளவுக்கு மெதுவாகச் சுழலவிட்ட ஒரே ஒரு ஃபேனும் மாத்திரம். சென்னைக்கு வந்து முதல் கோடை என்பதனால் ஃபேனை அணைக்க மனம் வரவில்லை. அதோடு குடிக்கும்போது ஃபேன்கூட இல்லையானால் வியர்வை பெருக்கெடுக்க ஆரம்பித்துவிடும் என்பதாலும் அதைத் தவிர்க்க இயலவில்லை.

சரியாக சனிக்கிழமை ராத்திரி பார்த்து இப்படியொரு கோரிக்கை வைக்கவேண்டும் என்று தோன்றியிருக்கிறது பாருங்களேன்… மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் குடித்து வெகுநாட்கள் ஆகின்ற காரணத்தால் உண்மையில் ரஸமாகவே இருந்தது. ஆஸ்திரேலியர்களுக்கு இதற்காகவே ஒரு பாராட்டுப் பத்திரம் வாசிக்கலாம். அதோடு தனியாகக் குடிப்பது யாரோடும் பகை நேராமல் இருக்க நல்ல உபாயம் என்பதாலும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில், மெல்லிய ஃபேன் காற்றில் மெடிடேஷன் போல ஒரு குடிடேஷன் வைபவம் பிரமாதமாக நடந்தேறியது.

இடையில் காற்று போதாமல் கொஞ்சம் வாங்கலாமே என்று பின் வாசலில் போய் நின்றபோதுதான் எங்கள் ஏரியாவிலேயே இந்த வைபவத்தை அனுசரித்த ஒரே விஐபி நான்தான் என்பது தெரிந்தது. சரி, எல்லோரும் என்னைப்போல தனியாகவா இருக்கிறார்கள்? வீட்டில் ஒருத்தருக்கொருத்தர் மூஞ்சியைப் பார்த்துக்கொள்ள சகிக்காமல்தானே டீவியைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதையும் அணை என்றால் எப்படி? உண்மையில் இம்மாதிரி விளக்ணைக்க நேரும்போது வீட்டிலுள்ள சக மனிதர்களோடு பேச ஆரம்பிக்க முடிகிறது என்பதையே பலரும் வலியுறுத்திவருகையில் தனியர்களைவிடவும் குடும்பங்களே இதை கண்டிப்பாக அனுசரிக்கவேண்டிய அவசியம் கோரப்படவே செய்கிறது. யார் காதில் விழுகிறது…

இரண்டொரு நண்பர்களுக்கு ஃபோன் செய்து பார்த்தபோதும் ஐபியெல் பார்த்துக்கொண்டோ சீரியல் பார்த்துக்கொண்டே இருந்தார்கள் என்பதுதான் தெரியவந்தது. அவர்கள் என்னிடம் கேட்டதெல்லாம் இப்படியொரு அறிவிப்பு வந்ததா? அது எப்போது வந்தது? என்பதுதான். இன்னொருவர் கேட்டார், ஆமாம் எங்கோ படித்தேன். அது என்றைக்கு? என்று. ஒன்றேல் இந்த எட்டரை டு ஒன்பதரை விஷயம் ஊடகங்களால் சரிவர பரப்பப்படவில்லை (அதாவது நமீதா போன்ற நவநாயகியர் கையில் தீப்பந்தத்தை ஏந்தியவாறு குதித்து குதித்து ஓடிவந்து மெúஸஜ் சொல்லவில்லை). அன்றேல் அதைக் கேட்டதாய்க் காட்டிக்கொள்வதையே அசிங்கமான கனவு கண்டதைப்போல தங்களுக்குள் மறைத்துக்கொள்வதை பலரும் விரும்பியிருக்க வேண்டும்.

இவற்றில் எது உண்மை என்று உங்களைக் கேட்டால் உங்கள் உள்மனம் வெறொன்றை முன்வைக்கக்கூடும். புவி வெப்பமயமாதலைக் குறித்த விழிப்புணர்வோ அக்கறையோ எனக்குத் தேவையில்லை என்பதே அது. ஏனென்றால் உங்களைப் பொருத்தவரைக்கும் அதெல்லாம் ஆங்கிலப் படங்களுக்கு திரைக்கதை எழுதுபவர்களின் தந்திரம் மாத்திரமே.

சரியாக ஒன்பதரைக்கு அவசியமான சுவிட்சுகளைப் போட்டுவிட்டு, ஆகாரத்தைப் பிட்டுப் போட்டுக்கொண்டு கொஞ்சநேரம் எச்பீயோவைப் பார்ப்பதற்குள் சரக்கு உறக்கத்திற்கு மணியடித்துவிட்டதால் டீவியையும் விளக்குகளையும் அணைத்துவிட்டு இன்றைக்கு நான்கூட மின்சாரத்தை சேமித்து இந்த பூமிக்கு என்னாலான நல்லுதவியை ஆற்றியிருக்கிறேன் என்கிற சந்தோஷத்தோடு படுக்கையறைக்குப் போனேன்.

இதோடு இந்தக் கட்டுரையை முடிக்க நேர்ந்திருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும். என்ன செய்வது, அடுத்த நாள் காலையில்தானே ஹாலில் சுழலவிட்டிருந்த ஃபேனை மப்பில் அணைக்க மறந்திருந்தது தெரிந்து தொலைத்தது.

4 thoughts on “விளக்கணைச்ச நேரத்திலே…

  1. மகாவீர் ஜெயந்தி, மீலாது நபி போன்ற தினங்களுக்கு அரசாங்கம் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிப்பதைப் போல மார்ச் 28 போன்ற தினங்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும். அன்றேல் புவி இரட்டிப்பு வெப்பமடையும்.

Leave a reply to vijaybabu Cancel reply