அல்லா அலாரம்!

சென்னைக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. சென்னையில் ஒரு வாடகை வீடு பார்த்துத் தருகிற விஷயத்தில் நண்பர்கள் உதவமுடியுமா என்று எனது ப்ளாகில் எழுதியிருந்தேன். அதைத் தொடர்ந்து நண்பர் பட்டர்ஃபிளை சூர்யா என்னை நேரில் வந்து சந்தித்து மிகவும் பிரயத்தனப்படவும் செய்தார். சென்னையில் இருந்த மற்ற நண்பர்களும் என்னை ஒரு வீட்டில் அடைத்துவிடமுடியாதா என்று மெனக்கடவே செய்தார்கள். அவர்களில் ஒருவரிடமும் நான் ஒரு கண்டிஷனை மட்டும் சொல்லியிருக்கவில்லை. அதை வெளியே சொல்லத் தயக்கம். சொன்னால் என்னை இந்துத்துவா என்று நினைத்துவிடுவார்களோ என்கிற அச்சம். ஏனென்றால் உண்மையில் நான் எந்தத்துவாவும் இல்லை.

என் பாட்டனாராகிய பாலசுப்பிரமணியம் பிள்ளை பிரிட்டிஷ் அரசில் ஆரம்பித்து இந்திய அரசு வரைக்கும் பணியாற்றினார். அவர் ஒரு மாஜிஸ்ட்ரேட். தன் பணி நிமித்தம் அவர் தன் சொந்த ஊராகிய போடிநாயக்கனூரிலிருந்து கிளம்பிவிட்டபோது நான் பிறப்பதற்கான அடிப்படை சாத்தியம்கூட நிகழ்ந்திருக்கவில்லை. பிற்பாடு கடலூரிலோ சிதம்பரத்திலோ பணியில் இருந்தபோதுதான் மனைவியை இழந்த வேகத்தோடு பத்தொன்பதே வயதான மகனுக்கு கல்யாணம் செய்து வைத்தார். ஆனால் அவரது மகனுக்கு பதினெட்டு வருடங்கள் கழித்துதான் முதல் மகன் பிறந்தான். இதனால் பாலசுப்பிரமணியம் பிள்ளை தன் பேரனைப் பார்த்திருக்கவில்லை. அவரது மகனான ஷண்முகநாதன் தன் மகனுக்கு, கோபிசெட்டி பாளையத்தில் அரசுப் பணியில் இருந்தபோது, ஊரைக் கூட்டி சீதா கல்யாண மண்டபத்தில் காதணி விழா நடத்தி, பாலசுப்பிரமணிய சங்கர நாராயணன் என்று பெயர் வைத்து, நாலு வருடங்கழித்து சங்கர் என்று பள்ளியில் பெயர் கொடுத்தார். அந்த சங்கருக்கு சுத்தமாக படிப்பு வரவில்லை. ஆனால் எழுத்து வந்தது. அதனால் அவன் பிற்பாடு சுதேசமித்திரன் என்கிற பெயரில் அதையும் இதையும் எழுத ஆரம்பித்தான்.

(இந்தப் பாரா இன்னொரு கட்டுரைக்கான ஊற்றுக் கண்ணைப் பிளக்கிறது. அதனால் இதே பேராவில் ஆரம்பித்து இன்னொரு கட்டுரை விரைவில் எழுதுவேன் என்பதாகவே நினைக்கிறேன். இரண்டு கட்டுரைகளில் ஒரே பாரா வரக்கூடாது என்று எதிர்வரும் உலகத் தமிழ் மாநாட்டில் அமென்மென்ட் பாஸôகாமல் இருந்தால் சரிதான்.).

பாலசுப்பிரமணியம் பிள்ளை, சிதம்பரம் கனகசபை நகரில் கட்டிய வீட்டை, அவரது மரணத்துக்குப்பிறகு விற்றுவிட்டு ஷண்முகநாதன் தன் பணி இழுத்த இழுப்பில் நகர ஆரம்பித்தார். தன் பணிஓய்வுக்கு சில வருடங்கள் முன்னால் ஒருவழியாக தனக்கென ஒரு வீட்டை அவர் கோவையில் கட்டினார். அப்போது நான் ப்ளஸ் 2 படித்துக்கொண்டிருந்தேன். கோவையில் புறநகரில் கோவைப்புதூர் எனும் இடத்தில் அந்த வீடு கட்டப்பட்டது. அந்த வீட்டிற்கு வலது பக்கம் நான்கு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு மலைத் தொடர் உண்டு. வீடு கட்டப்பட்ட காலத்தில் அவ்வளவு வீடுகள் இல்லாத காரணத்தால் வீட்டிற்கு மேற்கே வெகு அருகில் ஒரு பள்ளிவாசலும் அதன் பின்னால் திராட்சைத் தோட்டங்களும் அவற்றின் பின்னால் மலைத்தொடருமாக காட்சி ரம்மியமாக இருக்கும்.

காட்சி வரைக்கும் சரிதான். ஆனால் ஒருநாளைக்கு ஐந்து வேளைகள் பள்ளிவாசலின் மேலே இருக்கும் ஹாரன்கள் (இவை பொது இடங்களில் இப்போது தடை செய்யப்பட்டிருந்தும் பள்ளிவாசல்களில் மட்டும் விதிவிலக்கு இருக்கவே செய்கிறது) சுற்று வட்டாரத்தில் இருக்கும் இஸ்லாமியர்களை தொழுகைக்கு அழைக்கும்; உருது மொழியில் அதான் என்று அழைக்கப்படும் பாங்கு ஓசை முதலில் எங்கள் காதில் நுழைந்த பிறகுதான் இஸ்லாமியர்களின் காதுகளைத் தேடிப் போகும். வீட்டின் ஜன்னல்கள் முழுக்க கிரில்லால் ஆனவை என்பதனால் வெளியே கேட்கும் எந்த சத்தமும் கொஞ்சமும் ஃபில்டர் ஆகாமல் உள்ளே நுழைந்துவிடும் என்பதனால் அடிப்படையில் இஸ்லாமியர்களாக இல்லாத எங்களுக்கு இது பிரச்சனையாகவே இருந்தது.

வீட்டுக்கும் பள்ளிவாசலுக்கும் இடைப்பட்ட முன்னூறு நானூறு அடி தூரத்திற்கு அப்போதெல்லாம் வீடுகள் கிடையாது என்பதனால் காலி ப்ளாட்களில் நாலைந்து பேர் சேர்ந்துகொண்டு கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருப்போம். (தற்போது மாஸ்கோவில் இருக்கும் மகேஷைத் தவிர ஒருத்தருக்கும் உருப்படியாக விளையாடத் தெரியாது என்பது வேறு விஷயம்) அந்த சமயத்தில்தான் புதிதாக அந்த விளையாட்டுத் தோழர் எங்களுக்குக் கிடைத்தார். எங்களைவிட ஏùழுட்டு வயது அதிகம் இருக்கலாம். பெயர் ஞாபகம் இல்லை. இஸ்லாமியர். நபிகள் குறிப்பிடுவதுபோல் கணுக்காலுக்கு சற்று உயரமாக லுங்கி அணிந்திருப்பார். தலையில் வெள்ளைக் குல்லா இருக்கும். பவுலிங் போடும்போது அதை இடுப்பில் சொருகிக்கொள்வார்.

தொழுகை நேரம் வந்து விட்டால் போதும், அரக்கப்பரக்க பள்ளிவாசலுக்கு ஓடுவார். இதில் இரண்டு ஆச்சர்யங்கள் எனக்கு சில நாட்கள் புரியாமலே இருந்தன. ஒன்று: மற்றவர்களைப்போல தொழுகைக்கு அழைக்கும் பாங்கு ஓதப்படுமுன்பாகவே அவர் பள்ளிவாசலுக்குப் போய்விட்டு வந்துவிடுவார். இரண்டு: அவர் போய் உள்ளே நுழைந்ததும் டொக் டொக் என்று மைக்கில் தட்டுகிற சத்தமும் தொடர்ந்து பாங்கு ஓதுகிற சத்தமும் கேட்க ஆரம்பித்துவிடும். அவரது வருகையைப் பார்த்துதான் அங்கே பாங்கு ஓதுவதற்கென்று இருப்பவர் தொழுகைக்கான காலங்களை உணர்கிறாரா என்று எனக்குள் ஆச்சர்யமாக இருக்கும். அப்படி யோசிப்பதும் ஒருவகையில் சரியாகவே பட்டது. அவரது கையில் எப்போதும் ஒரு பழைய வாட்ச் காணப்படும். அதில் நேரத்தைப் பார்த்துவிட்டுத்தான் அவர் ஓடுவார். அப்படியானால் பள்ளிவாசலில் சுவர்கடிகாரமோ, பாங்கு ஓதுபவர் கையில் வாட்ச்சோ இல்லை என்பதாகக் கொள்ளலாம். எனவே என்பதாகக் கொண்டு நான் திருப்தியடைந்திருந்தேன்.

நாங்கள் விளையாடும்போது சில வேளைகளில் மூன்று குழந்தைகள் வந்து அதைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். விளையாட்டு முடிந்ததும் அவர்களை அவர் அழைத்துப் போவார். அவர்கள் அவரது குழந்தைகள்தான் என்பதை பிற்பாடு அறிந்தபோது முதலில் ஆச்சர்யமாகவும், முற்றாக அறிந்தபோது சாதாரணமாகவும் இருந்தது. ஆனால் பாங்கு ஓதப்படும் பாங்கு புலப்பட்டபோது என்னால் ஆச்சர்யம் தாளவேமுடியவில்லை.

பாங்கு ஓதப்படும் முறையில் மாற்றம் நிகழும்போது பாங்கு ஓதுபவர் மாறிவிட்டார் என்பதை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். ”அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்… அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்… அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹ்…” என்று தொடங்குகிற வேகத்திலும் அவசரத்திலும் நிதானத்திலும் குரலின் கரகரப்பிலும் காணப்படும் மாற்றங்கள், சிறிது காலத்துக்கு ஒருமுறை பாங்கு ஓதுபவர் மாறுகிறார் என்பதையோ, ஒருநாள் மட்டும் அவசரமாக வேறு யாரோ ஒருவர் ஓதுகிறார் என்பதையோ தொடர்ந்து கேட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு -அவர்கள் இஸ்லாமியர்களாக இல்லாதபோதும் தெரியப்படுத்திவிடும்.

நண்பர் சிறிது காலம் கழித்து வேறு ஊருக்குப் போய்விட்டார். அதன்பிறகு பாங்கு ஓதப்பட்ட விதம் வேறு விதமாக இருந்ததை நான் உணர்ந்தேன். அவரோடு பாங்கு ஓதுபவரும் போய்விட்டார், அல்லது அவரது வாப்பாதான் பாங்கு ஓதிக்கொண்டிருந்தார் என்பதாகவெல்லாம் என் அறிவுக்கு எட்டியவரை நான் யோசித்துக்கொண்டிருக்க, ஓர் இஸ்லாமிய நண்பர் அந்த உண்மையைப் போட்டு உடைத்தார். அதாவது அதுவரை பாங்கு ஓதிக்கொண்டிருந்தவர் சாக்ஷôத் எங்கள் விளையாட்டுத் தோழரேதான். இப்போதுதான் நாங்கள் கிரிக்கெட் விளையாடும்போது ஓதப்படும் பாங்கு அதிவேகத்தில் ஓதப்பட்டது ஏன் என்பதை என்னால் விளங்கிக்கொள்ள முடிந்தது.

இப்படி ஏதோ காரணங்களால் அந்தப் பள்ளிவாசலில் ஒவ்வொருமுறை ஓதப்படும்போதும் அது வெறும் இறைச்சலாகவே இருந்ததற்குக் காரணம் நான் முன்பே தெரிவித்திருந்தபடி ஹாரன் என்கிற வகைமையைச் சேர்ந்த ஒலிப்பெருக்கிதான் என்பதாகவே நான் நம்பிக்கொண்டிருந்தேன். நான் குடியிருக்க நேர்ந்த வேறு ஊரிகளிலும் சரி, பிற்பாடு தற்காலிகமாகச் செல்ல நேர்ந்த ஊர்களிலும் சரி, பாங்கு ஓதப்படுவது வெறும் சத்தமாகவே இருப்பதை என்னால் கவனிக்க முடியாமல் இருக்க முடியவில்லை.

பிற்பாடு கோவையில் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்குப் பின்னால் மத அடையாளங்களை நான் மிகவும் அஞ்ச ஆரம்பித்தேன். ஒரு கூட்டம் திடீரென நெருங்கி பெயரை மட்டும் கேட்கும்போது, அவர்களின் மத அடையாளங்களைத் தேட ஆரம்பிக்கிற அவலம் இருக்கிறதே, அதை நேரில் அனுபவித்தவர்களில் நானும் ஒருவன் என்கிற வகையில், இந்த பாங்கு ஓதுகிற விஷயத்தைக் குறித்த எனது கருத்தை வெளியிடவும் அஞ்சியவனாகவே இருந்துவந்தேன்.

ஏனென்றால் ஒவ்வொருநாளும் அதிகாலை நாலேமுக்கால் மணிக்கு முதல் முறையாக ஓதப்படும் பாங்கு என் தூக்கத்தைக் கலைத்துவிடுவது கிட்டத்தட்ட இருபது வருட அனுபவமாக இருந்தது. இந்த அனுபவம் பலருக்கும் இருக்கலாம். இதை மதங்கள் சாராத ஓர் அனுபவமாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். ஆடி மாசம் வந்தால் மாரியம்மன்கள் கண்களை விழித்துக்கொண்டு வீதியெங்கும் ஒலிபெருக்கிகளை முழக்கி எல்லார் ஈஸ்வரியின் குரலை பீய்ச்சியடிப்பதில்லையா என்று இஸ்லாமியர்கள் கேட்டால் பதில் சொல்ல இந்துக்களுக்கு என்ன அருகதை இருக்கிறது? இப்படி மாதத்துக்கொரு தெய்வத்தை முன்னிட்டு இதே இம்சையை அவர்கள் செய்வதில்லையா? சர்ச்சுகள் மட்டும் வாயைப் பொத்திக்கொண்டா இருக்கின்றன என்றெல்லாம் சர்ச்சைகளை எழுப்புவதல்ல இந்தக் கட்டுரையின் நோக்கம் (அதிலும் இந்துக் கோவில்களின் சமீபத்திய நடைமுறையான மின்சார மேளம் இருக்கிறதே, அதைவிடக் கொடுமையை ஒரு சைக்கோ கொலைகாரன்கூட செய்ய மாட்டான்).

இருந்தாலும் அதிகாலை நேரத்தில் ஒலிபெருக்கியின் மீது இரண்டுமுறை தட்டப்படும் சத்தமும் அதைத் தொடர்ந்து அப்போதுதான் தூக்கம் கலைந்து இன்னும் பெருகாத உடைந்த குரலில் ஓதப்படும் தொழுகைக்கான அழைப்பும் வெகுகாலம் என்னை வாட்டி வந்தது என்பதே உண்மை. பலவருடங்களுக்கு முன்பே இறந்துவிட்ட என் அம்மாச்சியும்கூட அல்லா அலாரம் அடித்தபோதே எழுந்துவிட்டேன் என்று இதைக் குறிப்பிட்டுச் சொல்வதுதான் அப்போதெல்லாம் என் நினைவுக்கு வரும்.

இதனாலேயே கட்டுரையின் முதல் பாராவில் சொன்னபடி சென்னையில் வீடு பார்க்கும்போதாவது அருகில் இந்தமாதிரி சத்தமேதும் கேட்காத இடமாக இருக்க வேண்டுமே என்கிற யோசனை மனதிற்குள் ஓடினாலும் அதை வெளியே சொல்ல மட்டும் ஒரு தயக்கம் இருந்தே வந்தது.

ஆனால் சில மாதங்களுக்கு முன்னால் நடந்த ஒரு சம்பவம் இந்த எண்ணத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதுதான் நான் உங்களிடம் சொல்ல விரும்புவது. கோவையில் செல்வபுரம் என்கிற பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் காணப்படுவார்கள். அந்த வழியாகவும் எங்கள் வீட்டுக்குப் போகலாம். அப்படி அன்றைக்கு டூ வீலரில் நான் செல்வபுரம் மசூதி வழியாக சென்றுகொண்டிருந்தபோது பாங்கு ஓதுகிற சத்தம் கேட்டது. சத்தம் என்று சொல்வது தவறு. உண்மையில் கேட்டது பாங்கின் அற்புதமான இசை. எத்தனை தேர்ந்த ஹிந்துஸ்தானி சங்கீதக்காரனின் சங்கதி வித்தைகளையும் தோற்கடிக்கக்கூடிய ஒரு கமகம் மற்றும் ப்ரிகாவோடு கூடிய இசை. நான் நாள்தோறும் கொடூரமான வடிவில் கேட்டுக் கேட்டு நொந்துபோயிருந்த அதே வார்த்தைகளின் மிக நுட்பமான இசை வடிவம் அது.

நான் டூவீலரை நிறுத்திவிட்டு அந்த இசை முடிகிறவரைக்கும் கேட்டுக்கொண்டிருந்தேன். அந்த இசையின் அருமை தெரிந்தோ தெரியாமலோ பள்ளிவாசலை நோக்கி விரைந்துகொண்டிருந்தவர்கள் யாரும் என் கண்களில் தென்பட்டிருக்க நியாயமில்லை. அடித்துக்கொண்டிருந்த வெய்யிலோ சாலையின் பிற ஓசைகளோ கேட்க ஆரம்பித்தபோதுதான் பள்ளிவாசலிலிருந்து வெளிவரும் இசை ஓய்ந்துவிட்டது என்பதை நான் உணர்ந்தேன்.

இஸ்லாமிய தேசத் திரைப்படங்கள் சிலவற்றைப் பார்க்க நேரும்போதோ, ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட இஸ்லாமிய தேசங்களைக் காட்ட விரும்புகிற ஹாலிவுட் படங்களிலோ நீங்கள் அவ்விதமான குரல் அழகைக் கேட்டிருக்கலாம். பெரும்பாலும் வெள்ளை வீடுகளால் நிரம்பியிருக்கும் ஊரை உயரத்திலிருந்து காட்டும்போது பள்ளிவாசலின் விளிப்பே அந்தக் காட்சியின் ஆராராகிறது. ஆனால் அந்தப் படங்களிலும் நான் கேட்டறியாத அற்புதமாக இருந்தன அந்த முகம் தெரியாத தோழரின் உச்சஸ்தாயியும் நீண்ட பிரிகாவுடன் கூடிய நேர்த்தியும்.

அதுவும் அதிகாலையில் ஓதப்படும் பாங்கில் இரண்டு வரிகள் இணைத்துக்கொள்ளப்படுகின்றன. அவை சொல்கின்றன: ‘உறக்கத்தை விடவும் தொழுகை சிறந்தது!’. தன் வேலையையே ஒரு கலையாகப் பார்க்கிற அந்த அசல் கலைஞனின் குரலை யார் வேண்டுமானாலும் மண்டியிட்டுத் தொழலாம் என்பதாகவே அப்போது என்னுள் தோன்றியது.

இத்தனை நாட்கள் தொல்லையாகக் கருதியது அதான் எனும் பாங்கையல்ல, ஓதுபவர்களின் கரடுமுரடான குரல்களைத்தான் என்பது அந்தக் கணத்தில் பளிச்சென்று விளங்கியது. என்ன செய்வது, நல்ல விஷயங்கள் எப்போதைக்குமா கொடுத்து வைக்கின்றன!

Advertisements

14 thoughts on “அல்லா அலாரம்!

 1. சரியான பார்வையில் சொன்னீர்கள்.

  அதை சரியான முறையில் சொல்லாத போது தொழக்கூடியவர்களுக்கே வெறுப்பாகத்தான் இருக்கும்.

  அதை அழகிய முறையில் சொன்னால் யாருடைய காதுகளையும் வருத்தமடைய செய்யாது.

  மிக்க நன்றி.

  1. நன்றி ஜமால். உங்கள் அன்புக்கும் பதிவுக்கும்.

 2. அருமை. இவ்வளவு நாட்கள் இதைப் பற்றி நினைத்துக் கூட பார்த்தது இல்லை. எது எப்படியோ. மற்ற மத துவேஷங்கள் இல்லாமல் இருந்தால் எதுவும் தவறில்லை.

 3. கோவைபுதூரில் நான் இப்பொழுது பயப்படும் சப்தம் போர் (ஆழ்குழாய் கிணர்?) போடும் சப்தம் தான். ஒரு மருத்துவமனைக்கு அருகாமையில் இருந்த எங்கள் வீட்டில் போர் போடவேண்டியதை எண்ணி நான் அடைந்த மன இறுக்கம் சொல்லி மாளாது.

  1. நீங்கள் சொல்வது சென்னையில் இருப்பவர்களுக்கு எவ்வளவு தூரம் புரியும் என்பது தெரியவில்லை. சென்னையில் இருபது முப்பது அடி குழாய் பதித்தாலே நிலத்தடி நீர் கிடைத்துவிடுகிறது. கோவைபுதூர் மாதிரி ஊர்களில் இருநூறு முன்னூறு அடி துளைக்க வேண்டும் என்பதால் அது கொடுமையான noise polution தான்.

 4. Sorry. இன்று தான் இந்த பதிவை பார்த்தேன்.

  துபாயில் வசித்த போது பள்ளி வாசலின் மிக அருகே எனது ரூம். அந்த ஓதும் இசை தெய்வீகமாய் இருக்கும். ஒரு இனம் புரியாத ஈர்த்தல் எப்போதும் உண்டு. அதுவும் ரமலான் மாதத்தில் இன்னும் சிறப்பாய் இருப்பதாக உணர்வேன்.. சிறப்பு ஓதுவர்கள் வெளி நாடுகளிலிருந்து வருவார்கள் என்று ரூம்மேட்டுகள் சொல்வதுண்டு.

  பகிர்விற்கு நன்றி.

 5. அருமையான பதிவு நண்பரே. இஸ்லாத்தில் பல உன்னதங்கள் இருகின்றன, ஆனால் அவைகளை புரிந்துகொள்ளாத பலரின் இரச்சல்களால் தீவிரவாதம் என்ற போர்வை அதன்மீது படர்ந்துவிட்டது வருத்ததிற்குரியது!!

 6. ஒரே நிகழ்வின் இருவேறு அனுபவங்கள் உங்கள் முதிர்ச்சியை கட்டுகிறது..உண்மை கதையாக நகர்கிறது…தொடர்ந்து நகரட்டும்.நன்றி சுதேச

 7. Pingback: NICK
 8. Pingback: REGINALD

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s