கோவா என்றொரு தமிழ்ப்படம்

சென்னையில் நான் வந்து இறங்கியிருக்கும் போரூருக்கு உடனடியாக மேம்பாலம் தேவை என்பதை உணர்ந்த கலைஞர் அரசு, அதற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்துவிட்டது. அதேபோல் என்னதான் போரூர் இன்னும் அமலுக்கு வராத சிட்டி லிமிட்டில்தான் இருக்கிறது என்றபோதும் அங்கு வசிக்கும் என்னைப் போன்ற சினிமா விசுவாசிகளை மனதிற்கொண்டு ஒரு மல்ட்டிப்ளெக்ஸையும் அரசு அருளுமா என்பதே எனது முதல் எதிர்பார்ப்பு.

ஓரளவாவது நல்ல தியேட்டரில் திரைப்படம் பார்க்கவேண்டுமானால் குறைந்தபட்சம் ஏவியெம் ராஜேஸ்வரியையும் கமலா திரைக்குழுமத்தையும்தான் நாடிப் போக வேண்டியிருக்கிறது. ஆர்காடு சாலை மீது இருக்கிற கடுப்பில் இரண்டொரு படங்களை அம்பத்தூர் ராக்கி திரைவளாகத்தில் போய்ப் பார்க்கிற அளவுக்கு வெறுத்துப்போய்விட்டேன் என்பதனால் இந்தக் கோரிக்கையை மனதிற்கொண்டு, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் சமீபத்தில் ஏதோ ஒரு பில்டிங் கட்டி அதை டெல்லியிலிருந்து வந்த தலைப்பாகை அணிந்த தாடிக்காரர் ஒருவரும் இந்தியர் ஒருவரை ஆகாயத்தில் காதலித்த வகையில் இத்தாலியிலிருந்து இங்கே வந்து செட்டில் ஆன அம்மணியார் ஒருவரும் திறந்து வைத்தார்களே, அந்த அளவு இல்லாவிட்டாலும் அதில் பாதி அளவாவது ஒரு கட்டிடம் கட்டிக்கொடுத்தால் திருவள்ளூர் மாவட்டமே தண்டனிட்டுத் தொழும்.

இந்தக் காரணத்தாலேயே வருகிற படங்களையெல்லாம் தாமதமாகவே பார்த்துத் தொலைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளவன் என்கிற காரணத்தால் இந்தத் தாமதமான பதிவை வாசித்து வையுங்கள்.

தமிழ்படம் மற்றும் கோவா ஆகிய இரண்டு படங்களையும் அடுத்தடுத்து பார்த்தேன். இரண்டும் ஒரே படத்தின் நீட்சி போலிருந்தது. பொதுவாக இணையத்திலும் காகிதத்திலும் பெருமளவும் விமர்சித்து முடிக்கப்பட்டுவிட்ட படங்கள் என்கிற காரணத்தால் இந்த ஒப்புமையை மட்டும் முன்வைப்பதே எனது உத்தேசம்.

சாதாரணமாக ஹாலிவுட்டில் வெளிவந்த படங்களைப் பகடி செய்து வெளிவரும் படங்களில் அதற்கென்று சொந்தமாக ஒரு கதையும் இருக்கவே செய்யும். இதுவே ஆங்கிலத்தில் காணப்படும் வழக்கம். இவ்விதமான படங்களுக்கென்றே தனிப்பட்ட ரசிகர் பட்டாளமும் உண்டு என்பதோடு எல்லா படங்களையும் பார்க்க விரும்பும் பொதுவான ரசிகர்களையும் இவை வெகுவாகக் கவரவே செய்யும். இந்தப் படங்களின் இன்னொரு சிறப்பு, வணிகப்படங்களைக் கண்டு மனம் பொறுக்க முடியாமல் புலம்பும் உலகப்பட ரசிகர்களையும்கூட இவை கையாளும் நையாண்டி கவரவே செய்யும் என்பதே. இந்த வகையில் தமிழ்படம் பரவலான வெற்றியைப் பெற்றதில் எவ்விதமான ஆச்சர்யமும் இல்லை. ஆனாலும் இந்தப் படத்திற்கென்று சொந்தமாக உருப்படியான கதை எதுவும் இல்லாமற் போனது இயக்குனரின் விஷயவறட்சியையே காட்டுகிறது என்பதாகவே தோன்றுகிறது. அடுத்த படத்தில் இவ்விதமான போக்கில் இல்லாமல் அவர் தன் திறமையை நிரூபிக்கிற வரைக்கும் அமுதனைப் பற்றி பேசுவதற்கு எதுவுமே இல்லை என்பதே எனது அபிப்பிராயம்.

இதற்கு நேர்மாறாக வெங்கட் பிரபுவின் கோவா கிராமத்து இளைஞர்களின் உயர்ந்த லட்சியத்தைப் பற்றிய படமாக ஒரு நவீனமான கதையோடு வெளிவந்தது. திரைகடலோடு திரவியம் தேடு என்கிற கொள்கைப்பிடிப்பை வலியுறுத்துவதாக அமைந்திருந்த இந்தத் திரைப்படம் கற்றுத் தரும் பாடத்தை இளைஞர்கள் ஏற்றால் தமிழச்சிகள் கன்னி கழியாமல்தான் காலம் கழிக்க வேண்டும் என்பதைத் தவிர இந்தப் படத்தால் பெரும் ஆபத்தேதும் இல்லை என்பதாகவே தெரிகிறது. அதாவது இப்படியாவது ஒரு கதை இந்தப் படத்தில் இருந்து தொலைத்ததே பெரும் ஆறுதல் என்பதே நான் சொல்ல வருவது.

தமிழில் ஹோமோ செக்ஷுவாலிடியை காட்சிப்படுத்திய வகையில் கோவா ஒரு முக்கியமான திரைப்படம் என்றபோதும் அந்த விஷயத்தாலேயே பலராலும் கன்னாபின்னாவென்று கடிந்துகொள்ளப்பட்ட படமாகவும் அது விரிகிறது. சினிமாவுக்காக நான் வைத்திருக்கும் இதைவிட வில்லங்கமான ஒரு கதையை திரைக்கதையாக்குகிற முயற்சியை இன்னும் நூறு வருடங்கள் தள்ளிப்போட வேண்டியதுதான் போலிருக்கிறது என்கிற அயற்சியையே இந்தச் சாடல்கள் எனக்குள் விதைக்கின்றன.

இவை கிடக்கட்டும், வெங்கட் பிரபுவின் மற்ற படங்களிலிருந்தே அவரது ஒருவிதமான போக்கை நாம் அவதானிக்கலாம். அவரது முதல் திரைப்படமான சென்னை ஆறு லக்ஷத்து இருபத்தெட்டு படத்தைப் பார்த்த நடிகர் பிரபு, அந்தப் படத்தில் நடித்த நடிகர் ப்ரேம்ஜியை படவா பிச்சுப்பிடுவேன் பிச்சு என்று செல்லமாக மிரட்டியதாக ஒரு செய்தி பரவியதை யாரும் மறந்திருக்க முடியாது. என்ன கொடுமை சார் இது என்கிற அந்தப் படத்தின் வசனம் சந்திரமுகி க்ளைமாக்ஸில் பிரபு ரஜினிகாந்திடம் புலம்பும் என்ன கொடும சரவணன் இது என்கிற வசனத்தின் பகடி என்பதே இதற்கான காரணம். இங்கேதான் ஆரம்பித்தது இந்த வில்லங்கம்.

பகடி செய்யும் படம் என்கிற முத்திரை இல்லாமலே எடுக்கப்பட்டபோதும் வெங்கட்பிரபு வேறு படங்களைப் பற்றிய நையாண்டியையே தன் படத்தின் வலுவான நகைச்சுவைக்கு உபயோகிக்க ஆரம்பித்தார். வடிவேலுவுக்கு அடிவாங்குவதும், விவேக்குக்கு மெúஸஜ் சொல்வதும் அடையாளமானதுபோல ப்ரேம்ஜிக்கு இவ்விதமான நையாண்டியே அடையாளமாகிப்போனதும் இவ்விதமாகத்தான். கோவாவில் ப்ரேம்ஜி பங்குபெறும் சண்டைக்காட்சியும்கூட சக ஹீரோக்களை நையாண்டி செய்யும்விதமாகவே எடுத்துக்கொள்ளப்படும் என்பதாகவே கோவா டீம் நம்பியிருக்கிறது என்பது பரிதாபத்துக்குரியதுதான்.

கோவாவில் இவ்விதமாக பல்வேறு படங்களின் கான்செப்ட்கள் நையாண்டி செய்யப்படுகின்றன. சமுத்திரகனியின் முதல் நாயகன் என்கிற நட்புரிமையோடோ வெற்றியடைந்த படமொன்றின் பெரிதும் கவனிக்கப்பட்ட காட்சியொன்றை ஞாபகப்படுத்துவது அல்லது பகடி செய்வது தன் படத்துக்கு வருபவர்களை மகிழ்விக்கும் என்கிற எண்ணத்தாலோ சுப்ரமணியபுரம் தலையாட்டலில் தொடங்கி, சிம்புவின் மன்மதன் வரைக்கும் இந்தப் பகடி நீள்கிறது. சமுத்திரகனிகூட தன் நாடோடிகளில் இந்தத் தலையாட்டலையும் ரீரெக்கார்டிங்கையும் உபயோகிக்கவே செய்திருந்தார் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். இவ்விதமாக நையாண்டி என்பது ஒரு சக்ஸஸ் ஃபார்முலாவிக்கொண்டிருப்பதுதான் அமுதனை இதையே ஒரு படமாக ஆக்கினால் என்ன என்று யோசிக்கவும் தூண்டியிருக்கலாம்.

இந்தமாதிரியான நையாண்டிகள் படத்தை டாமினேட் செய்யும்போது தன் கலைத் திறமையின்மீது டைரக்டர் கொண்டுள்ள அவநம்பிக்கைதான் மிளிருகிறதே தவிர, அவரது திறமையோ புத்திசாலித்தனமோ வெளிப்படுவதேயில்லை. பாடல்களில் தொடங்கி, காட்சிகள் வரைக்கும் ரீமிக்ஸ் செய்யப்படுகிற இந்தக் கலாச்சாரம் உள்ளபோதே இவர்கள் தூற்றிக்கொள்ள வேண்டியதுதான்.

வெங்கட்பிரபு திறமையான இயக்குனர் என்பதனாலேயே இந்தக் கடிந்துகொள்ளல். தொடர்ந்து தன் படங்களில் திரைக்கதையில் அவர் காட்டும் மெத்தனம் மாறவேண்டுமானால் அவர் சினிமாவை கொஞ்சம் சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்பதே எனது கருத்து.

கொத்தமங்கலம் சுப்புவின் நாவலான தில்லானா மோகனாம்பாள், தமிழில் மூன்று முறை எடுக்கப்பட்டது. முதல் முறை சிவாஜி பத்மினி நடிக்க, ஏபீநாகராஜன் இயக்கத்தில் அதே பெயரில் எடுக்கப்பட்டது. பிற்பாடு கங்கை அமரனின் இயக்கத்தில் கரகாட்டக்காரன் என்கிற பெயரில் ஒருமுறையும் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் சங்கமம் என்கிற பெயரில் ஒருமுறையும் அது காப்பியடிக்கப்பட்டது. காப்பியடிக்கப்பட்டபோதும் கரகாட்டக்காரன் தில்லானா மோகனாம்பாளை விடவும் சிறப்பாக ஓடியது. சங்கமம் படுதோல்வியடைந்தது. இந்த உதாரணத்தை வெங்கட் பிரபு மறந்துவிடக்கூடாது. இயக்குனரின் திறமை என்பதே இந்த மாதிரியான முயற்சிகளில் வெற்றிக்கான அடிப்படை என்பதையே இதன்மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. இந்த சூத்திரத்தில் வெற்றி வாகை சூடிய கங்கை அமரனின் மகன் என்கிற காரணத்தாலேயே அவர்மீதான எனது எதிர்பார்ப்பு சற்று மிகையாகவே இருப்பதில் பிழையென்ன இருக்கிறது!

Advertisements

7 thoughts on “கோவா என்றொரு தமிழ்ப்படம்

 1. சுவாரஸ்யமான கட்டுரை… அங்கங்கே சிரிப்பாணியும் வந்தது.

  வெங்கட் பிரபு தன் நிலைய வித்வான்களைக் கறாராக கை விட வேண்டும். கோவா பார்க்கும்போது வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் பிரேம்ஜி ‘பஞ்ச்’ அடிப்பாரோ என பயம் பயமாக இருந்தது.

 2. அமுதனைப் பற்றிய உங்கள் கருத்தை முகில் கிட்டத்தட்ட பிரதிபலித்திருந்தார்! தமிழ் சினிமாவின் க்ளிஷே காட்சிகளுக்கும் மாஸ் ஹீரோக்களுக்கும் லாடம் கட்டியிருக்கும் இயக்குநர் அமுதனுக்கு அடுத்த படம்தான் நிஜமான சவால். என்ன செய்யப் போகிறாரோ?

  நானும் உங்களை மாதிரியே கோயம்புத்தூரான்தான் (‘வள்ளியூரான்’ ஞாபகத்துக்கு வருதா :-)) என்ன கோவையிலே நீங்க எனக்கு சீனியர்! சென்னையில் நான் உங்களுக்கு சீனியர் (2004 காதலர் தினத்தன்று இங்கு வந்து இறங்கியவன் என்ற முறையில் இதைச் சொல்ல நான் கடமைப்பட்டுள்ளேன்!)

  அன்புடன்
  வெங்கட்ரமணன்

  1. நன்றி வெங்கட்ராமன், சென்னைக்கு நான் குடி பெயர்வது நான்காவது முறை. 1988 லிருந்து இந்த வைபவம் நடந்து வருகிறது. இருந்தாலும் நீங்களே சீனியராக இருந்துவிடுங்கள். என் வயசாவது குறையும்.

 3. நான்காவது முறையாக சென்னைக்குக் குடிபெயர்ந்ததன் மூலம் தில்லானா மோகனாம்பாளை மிஞ்சிவிட்டீர்கள்

  1. மிஞ்சினால் தப்பில்லை. கொஞ்சினால்தான் தப்பு.

 4. Pingback: ALEJANDRO

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s