பசுமை நிறைந்த அறுபதுகள்

இந்தியாடுடே தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் விதமாக ஒரு புத்தகம் கொண்டுவர இருந்தது. நாற்பதுகள் தொடங்கி பத்து பத்து வருடங்களாக தமிழ் சினிமாவின் வரலாற்றைப் பிரித்து வேறு வேறு எழுத்தாளர்கள் மற்றும் விமர்சகர்களிடம் கொடுத்த வகையில் என்னிடம் கொடுக்கப்பட்ட வருடங்கள் அறுபதுகள். எந்தக் காரணத்தாலோ அந்த முனைப்பு தள்ளிப்போடப்பட்டுவிட்டது. அதற்காக நான் எழுதிய கட்டுரையை கீழே கொடுக்கிறேன்.

குப்தர்களின் காலத்தைப் பொற்காலம் என்று சொல்கிற வழமையிலிருந்து நோக்கினால் தமிழ் சினிமாவின் பொற்காலம் கண்டிப்பாக அறுபதுகளாகத்தான் இருக்க முடியும். அறுபதுகளில்தான் வண்ணப்படங்களின் பிராபல்யம் தொடங்குகிறது. அறுபதுகளில்தான் பியார்பந்துலு, பீம்சிங், தாதா மிராஸி, ஏபீநாகராஜன், ஏஸிதிருலோகச்சந்தர், கேயெஸ்கோபலாகிருஷ்ணன் ஆகிய இயக்குனர்களின் கொடி வானளாவப் பறக்கிறது. தன் முதல் படத்திற்குப் பின் இயக்குனர் ஸ்ரீதர் அறுபதுகளில் தன் அருமையான படங்களின் வாயிலாக முக்கியத்துவத்தைப் பெறுகிறார். நாடகங்களைத் திரையாக்கம் செய்வதன் கடைசி காலம் என்கிற அளவிலும் முக்கியத்துவம் பெறுகிற பார்வையில் கேபாலச்சந்தர் எனும்; பிற்காலத்தில் தமிழ் சினிமாவின் மும்மூர்த்திகளில் ஒருவராக விளங்கிய; இன்றைக்கும் தன் ஆளுமையோடு உலவி வருகிற இயக்குனரின் வருகையும் இந்தக் காலகட்டத்தில்தான் நேர்கிறது.

சினிமாவின் பரிணாமத்தைக் குறித்து பேச எழுகையில் இயக்குனர்களின் பரிணாமம் மற்றும் ஆளுமை குறித்து பேசுவதே முதல் செய்கையாக இருக்க முடியும். ஏனென்றால் ஓர் இயக்குனர் கனவு காண்கிற சினிமாவைத்தான் பார்வையாளன் பார்க்க முடியும். இயக்குனரின் கனவு உன்னதமானதாக இருந்தால் சினிமாவும் உன்னதமாகக் காலத்தில் நிலைத்து நிற்கும். இயக்குனர் காணும் கனவின் சக பயணிகளே நடிகர்களும் டெக்னீஷியன்களும். சில நேரங்களில் அவர்களின் உருவாக்கமும் இயல்பும்கூட இயக்குனர்களால்தான் சாத்தியமாகியிருப்பதையும் நாம் அறிந்தே வந்திருக்கிறோம்.

மணிரத்னம், ஷங்கர், கேயெஸ்ரவிக்குமார், பாலா, வசந்தபாலா, அமீர், ஹரி, பேரரசு என்று சொன்னால் தெரியும், அதைவிட்டு மேலே சொன்ன இயக்குனர்கள் எல்லாம் எதை சாதித்தார்கள் என்று கேட்கிற இளைய சமூகத்துக்காக கீழே ஒரு பட்டியலைக் கொடுக்கிறேன்.

கப்பலோட்டிய தமிழன், கர்ணன், பலே பாண்டியா, ஆயித்தில் ஒருவன், பாசமலர், ஆண்டவன் கட்டளை, ஆலயமணி, உயர்ந்த மனிதன், புதிய பறவை, தேன்நிலவு, நெஞ்சில் ஓர் ஆலயம், திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள்…

இந்தப் பட்டியல் நீளமானது மட்டுமல்ல, மிகவும் நேர்த்தியானதும்கூடஙு அட்லீஸ்ட் இவை தமிழ்ப்படங்கள் என்கிற ஸ்மரணையாவது உங்களுக்கு இருந்தால் ரொம்ப சந்தோஷம். இந்தப் படங்களை மேற்சொன்ன இயக்குனர்கள்தான் நமக்குக் கொடுத்தார்கள். இவற்றை உண்மையிலேயே நீங்கள் பார்க்கவில்லை என்று சொன்னால் அருகாமை கிராமங்களில் உள்ள டூரிங் டாக்கீஸ்களையெல்லாம் நாட வேண்டியதில்லை. உங்கள் வீட்டையே திரைக்கொட்டிலாக மாற்றிவிட்ட தொலைக்காட்சி சானல்களின் பட அணிவரிசைகளை கவனித்துக்கொண்டிருந்தாலே போதும். இல்லையானால் இருக்கவே இருக்கிறது சி.டி. புதுப்படங்களை திருட்டுத்தனமாக வாங்கிப் பார்ப்பதற்கான சாதனம் என்பதாக நீங்கள் நம்பிக்கொண்டிருக்கும் டிவிடி ப்ளேயர்களில் இந்தப் படங்களை வாங்கிப் போட்டுப் பாருங்கள். மலிவு விலையில் மார்க்கெட்டில் கிடைக்கின்ற அற்புதங்கள் இவை.

சினிமா 1930களில் தமிழுக்கு வருகிறது. ஆரம்ப காலத்தில் வளர்ச்சியுறா நிலையில் வெளிவந்த படங்களில் மிகச்சிலவே இன்றும் போற்றத்தக்க தமிழ் சினிமாக்களாக வலம் வருகின்றன. உதாரணமாக வாசனின் ஒளவையார், ஜெமினியின் சந்திரலேகா, எல்விபிரசாத்தின் இயக்கத்தில் விஜயா வாஹினியின் மிஸ்ஸியம்மா முதலானவைஙு இந்தப் படங்கள் ஸ்டுடியோக்களின் ஆதிக்கத்தில் சினிமா இருந்ததனால் சாத்தியமானவை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஹாலிவுட்டில் உள்ளதைப்போல் ஸ்டுடியோக்கள் கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் இவை. அறுபதுகள் வாக்கில் அந்தப் போக்கு ஓரளவுக்கு மாற்றம் காண ஆரம்பித்திருந்தது. இருந்தாலும் அறுபதுகளும் ஸ்டுடியோக்களின் ஆதிக்கம் மிகுந்த காலமாகவே இருந்தது. ஆனால் ஸ்டுடியோக்களை வாடகைக்கு அமர்த்தி படங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் பெருகியிருந்த காலம் என்பதால் பெரும் மாற்றம் நிகழ வாய்ப்பாக இருந்தது. இதனாலேயே இயக்குனர்களின் உருவாக்கம் பெரிதும் நிகழக்கூடிய சாத்தியத்தையும் அறுபதுகளின் சினிமா வழங்கி முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

பெரும் முதலீட்டில் ஸ்டியோக்களை நிர்மாணிக்க முடிபவர்கள்தான் சினிமா தயாரிக்க முடியும் என்கிற நிலை மாறாமல் இருந்திருந்தால் ஸ்ரீதர் போன்ற இயக்குனரால் காஷ்மீர் வரைக்கும் போய் தேன்நிலவு என்றொரு காலத்தால் அழியாத படத்தைக் கொடுத்திருக்க முடியாது. அதற்குப் பத்து வருடங்கள் முன்னால் ஸ்ரீதர் அந்தக் கதையைத் தூக்கிக்கொண்டு போயிருந்தால், மலைகளைத் திரைச்சீலைகளில் வரைந்து சிறு குட்டைகளை உருவாக்கி அதில் ஏன் படகை விடக்கூடாது என்றுதான் ஸ்ரீதரிடம் அவரது தயாரிப்பாளர் கேட்டிருப்பார். இருந்தாலும் தன் சிவந்த மண் படத்துக்காக ஒரு நதியையே செட் போட்டவர் ஸ்ரீதர். அவரது வேறு சில சாதனைகளும் குறிப்பிடத்தக்கவை. அவர் இயக்கிய காதலிக்க நேரமில்லை படத்துக்காகத்தான் மதராஸில் முதன்முதலில் கலர் ஃபிலிம் ப்ராஸஸிங் செய்யப்பட்டது. ஒரு காமெடிப் படத்துக்கு அதிகபட்ச செலவு செய்யலாம் என்கிற அவரது துணிச்சல் முதலில் பலராலும் ஏளனம் செய்யப்பட்டாலும் படத்தின் வெற்றி அவர்களின் வாயை அடைத்தது. அதேபோல் சிவந்த மண் படத்துக்காகத்தான் தமிழ்ப்படம் முதன் முறையாக வெளிநாட்டில் ஷøட் செய்யப்படுகிறது.

ஸ்ரீதரின் முதல் படமான கல்யாணப் பரிசு 59ல் வெளிவந்தது. அது ஒரு சூப்பர் சோகப்படம். ஸ்ரீதர் படம் என்றாலே அழுது வடியும் என்பதுபோன்ற மாயையை உருவாக்கியது அதுஙு அனால் அதைத் தொடர்ந்து வந்த தேன் நிலவு அந்த எண்ணத்தை உடைத்தெறிந்ததுஙு ஸ்ரீதரால் காதலைக் காமெடியாகவும் தரமுடியும் என்பதை நிரூபித்தது அது. ஆனால் அதன்பிறகு வெளிவந்த அவரது நெஞ்சில் ஓர் ஆலயம் அவர் மீதான கவனத்தை மேம்படுத்தியது. அது திரும்பவும் டிராஜிடி. இந்தப் படங்கள் முறையே 61, 62, ஆகிய வருடங்களில் வெளிவந்தன. ஆனால் ஸ்ரீதர் பிற்காலத்தில் தனக்கான மார்க்கமாகக் கைக்கொண்டது தேன்நிலவு ஸ்டைல்தான். 64ல் வெளிவந்த கலர் படமான காதலிக்க நேரமில்லை, 67ல் வெளிவந்த ஊட்டி வரை உறவு ஆகியவை இதை நிரூபிக்கின்றன. 69ல் போராளிகளின் கதையை சிவந்த மண்ணில் அவர் கொடுத்தார். இருந்தாலும் இந்தப் போக்கு நீடிக்காமல் போனதால் பின்வந்த காலங்களில் அவர் காதல் காமெடி இவற்றுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய படங்களுக்கு மீண்டும் திரும்பிவிட்டார். இதன் காரணமாகவே தமிழுக்கு தவறான ஒரு பாதை போட்டுக்கொடுத்த இயக்குனர் என்கிற அவதூறையும் அவர் பெறவே செய்கிறார். ஏனென்றால் சாதனைகள் பாராட்டப்படுகின்ற இந்த உலகில் பிழைகள்தானே பின்பற்றப்படுகின்றன.

பிற்பாடு வந்தவர்கள் இந்த காதல் காமெடி ஆகியவற்றோடு கூட ஆக்ஷன் என்று ஒரு வரையறையை ஏற்படுத்திக்கொண்டு அதிலிருந்து மீளமுடியாமல் போனது ஸ்ரீதரின் ஒருசில படங்களின் வெற்றியைக் கண்டு தவறாகக் கற்றுக்கொண்ட பாடத்தினால்தான். அந்த அவலங்கள் எல்லாம் எழுபதுகளில்தான் தலையெடுக்கின்றன என்கிற வகையில்தான் அறுபதுகளின் சினிமா பொற்காலச் சினிமா என்று நான் சொல்கிறேன்.

அறுபதுகளின் மகத்தான மற்றொரு சாதனை ஏபீநாகராஜன் நிகழ்த்தியது. இலக்கியத்தில் சங்ககாலங்கள், பக்தி இலக்கியங்களின் காலம், சுதந்திரவேட்கைக் காலம் என்று வகைமைகள் உள்ளதுபோல், இந்த ஏபீநாகராஜன் திருவிளையாடல் என்கிற ஒரு பக்திப் படத்தை முதலில் கொடுத்தார். அதன் மகத்தான வெற்றி கொடுத்த தைரியத்தில் சரஸ்வதி சபதம், திருவருட்செல்வர், கந்தன் கருணை, திருமால் பெருமை என்று அறுபதுகளை ஒருவகையில் பக்தித் திரைப்படக் காலமாகவே உருவாக்கிக் காட்டினார். அந்தப் படங்களோடு அதன்பிறகு வந்த, தற்போதும் வெளிவருகிற பக்திப்படங்களை ஒப்பிட்டு நோக்கினால் இலக்கியத்துக்கும் மலிவிலக்கியத்துக்கும் ஊடான வித்தியாசம் என்ன என்பதும் விளங்கிவிடும். பக்தியைப் பரப்புவதற்காக என்பதாக இல்லாமல், உபன்யாசங்களிலும் காலட்சேபங்களிலும் கேட்டு வியந்திருந்த புராணங்களைக் கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்திய சாதனையில்தான் ஏபீநாகராஜன் இன்றும் நினைக்கப்படுகிறார்.

புலவரே, நீரே முக்கண் முதல்வனாகவும் ஆகுகஙு உமது நெற்றியில் ஒரு கண் காட்டிய போதிலும், உமது உடம்பெல்லாம் கண்ணாக்கிச் சுட்ட போதிலும் குற்றம் குற்றமே! நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே! என்று ‘எம்பெருமான்’ ஈசன் மீதே வசன மழையைப் பொழிந்த நக்கீரக் கிழவரை நன்றாக உற்றுப் பாருங்கள். அந்த வசனத்தை எழுதியதும், அந்தப் பாத்திரத்தில் நடித்ததும், அந்தப் படத்தை இயக்கியதும் அவரேதான். அதுதான் ஏபீநாகராஜன்!

‘ப’ வரிசை இயக்குனர் என்பதாக வாழும் காலத்திலேயே குறிப்பிடப்பட்ட இயக்குனர் பீம்சிங்கின் (தற்போதைய எடிட்டர் லெனினின் தந்தை) உன்னதப் படைப்பான பாசமலர் 61ல் வெளிவந்தது. அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட இந்தப் படம், சினிமாவுக்குப் போகும்போது மறக்காமல் கர்ச்சீஃப் எடுத்துக்கொண்டு போக வேண்டும் என்கிற விழிப்புணர்வை பார்வையாளர்களிடத்தே ஏற்படுத்தியது.

சிவாஜி கணேசனும் சாவித்திரியும் அண்ணன் தங்கையாக நடித்த இந்தப் படத்தின் உணர்ச்சி ததும்பும் காட்சிகள் பார்வையாளர்களைத் தேம்பித் தேம்பி அழ வைத்தன. இந்தப் படம் வெளிவந்து கிட்டத்தட்ட இருபது வருடங்கள் கழித்து சேலத்தில் நான் சந்தித்த என் வயதையொத்த பெண்ணொருத்தி என்னிடம் இதைக் குறிப்பிட்டுச் சொன்னாள், எனக்கு ஓர் அண்ணன் இல்லையே என்கிற ஏக்கத்தை எனது நெஞ்சில் பதித்துவிட்டது இந்தப் படம் என்று. இன்றைக்கும் இது அப்படியே பொருந்தும். என்னதான் சிவாஜிகணேசனின் மிகை நடிப்பு உறுத்தினாலும் அதை நாடகபாணி நடிப்பின் வகைமையில் பார்க்கப் பழகிவிட்டால் தமிழுக்குக் கிடைத்த செல்வம்தான் அவர் என்பது விளங்கும். இருந்தாலும் இந்தக் குறை கூட இல்லாத அசல் நடிகை சாவித்திரி அந்தப் படத்தின் மிகப்பெரிய பலம்.

தமிழ் சினிமா இதுவரை கண்ட நடிகைகளிலேயே மிகுந்த அழகானவர் வைஜந்திமாலா என்று சொன்னால் (இரண்டாவது அழகி நயன்தாரா) மிகச் சிறந்த நடிகை சாவித்திரிதான் என்பதை உங்கள் தாத்தாவிலிருந்து உங்கள் மகன் வரைக்கும் ஒப்புக்கொள்வார்கள். சிவாஜியும் சாவித்திரியும் இணைந்து நடித்த பல படங்களில் பாசமலர் ஆகச்சிறந்த படமாக பதிவு செய்யப்பட்டு பல காலமாகிறது.

இதைத் தொடர்ந்து பீம்சிங் தன் ப வரிசையில் பாலும் பழமும், பாவமன்னிப்பு, பார்த்தால் பசி தீரும், பாதகாணிக்கை, பார் மகளே பார், பச்சை விளக்கு, பழனி, பாதுகாப்பு என்று ஆகச்சிறந்த படங்களை தமிழுக்கு நல்கி, அறுபதுகளின் முடிசூடா மன்னனாக விளங்கினார். குறிப்பாக நடிகர் சிவாஜி கணேசனின் நடிப்பாற்றலை பெரிதும் பயன்படுத்திக்கொண்டவர் என்கிற அளவிலும் பீம்சிங்கின் பங்களிப்பு முக்கியமானது. பீம்சிங்கின் இந்தப் படங்கள் கதைக்கும் பாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் தருவனவாக அமைந்திருந்த வகையிலேயே தமிழில் சிறந்த படங்களும் சிறந்த நடிப்பாற்றலும் வெளிப்படுவது சுலப சாத்தியமாகியிருந்தது.

அறுபதுகள் வண்ணப்படங்களின் ஆரம்பகாலமாகத்தான் இருந்தன என்பதனால் பீம்சிங்கின் இந்தப் படங்கள் கருப்புவெள்ளைப் படங்களாகவே அமைந்திருந்தன. நல்ல சினிமா ரசிகர்கள் கருப்பு வெள்ளைப் படங்களின் அற்புதங்களை உணர்ந்தவர்களாகவே இருக்க முடியும். கருப்பு வெள்ளைப் படங்கள் காணாமற்போய் பல காலமான பின் சமீபத்தில் ஹாலிவுட்டில் ஸ்பீல்பெர்க் எடுத்த ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட், காலத்தைப் பிரதிபலிக்கும்பொருட்டும், கருப்பு வெள்ளையின் நேர்த்தியை மீண்டும் ருசித்துப் பார்க்கும் வகையிலும் கருப்பு வெள்ளையில்தான் எடுக்கப்பட்டது. கருப்பு வெள்ளைப் படங்களுக்கென்று பிரத்யேக ஒளியமைப்பு செயல்படும். திரையில் காணும் பிம்பம் யாவும் நிழல் மற்றும் நிஜம் ஆகிய இரண்டின் கலவைதான் என்பதை வண்ணப்படங்களில் நாம் கண்டறிய இயலாது. வண்ணங்களில் சிக்குறும் மனம் நிழலின் அழகில் கவனத்தைச் செலுத்த இயலாது.

இந்த அடிப்படைதான் மேற்சொன்ன படங்களின் நேர்த்திக்கு பெரிதும் துணை செய்தன. அதே அறுபதுகளில் அதே சிவாஜிகணேசன் நடித்து வெளிவந்த தில்லானா மோகனாம்பாள், புதிய பறவை ஆகியவை ஈஸ்ட்மென் கலர் படங்கள். ஈஸ்ட்மென் கலரின் அடிப்படைப் பிரச்சனை வண்ணங்கள் பெல்லட் நைஃபில் அப்பி வைத்த மாதிரி காணப்படுவதுதான். சரோஜாதேவிக்கு ரோஸ் கலரில் மேக்கப் போட்டால் அவர் பிங்க் கலரில் காணப்படுவது ஈஸ்ட்மென்னில் தவிர்க்க இயலாதது. பீம்சிங்கின் இந்தப் படங்கள் இந்த வம்பிலிருந்து தப்பிய வகையில் மிகவும் அழுத்தமான திரை ஆவணங்களாக இன்றைக்கும் நமக்காகக் காத்திருக்கின்றன.

பீம்சிங் உறவுகளின் பின்னல்கள் உணர்ச்சிகளின் பின்னல்கள் ஆகியவற்றைப் பிழிந்து கொடுத்தார் என்றால், பந்துலு பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவராகத் திகழ்ந்தவர்.

கப்பலோட்டிய தமிழன், கர்ணன், ஆயிரத்தில் ஒருவன் என்று முக்கியமான சில படங்கள் 60களில் அவரது பங்களிப்பாக இருக்கின்றன. அவர் இயக்கிய முரடன் முத்து சிவாஜி கணேசனுக்கு 99வது படம். அது ’64 திபாவளியன்று ரிலீஸ் ஆகிறது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் சிவாஜியின் 100வது படமான நவராத்திரியும் அதே நாளில் வெளியானது. (ஒரே நாளில் வெளியான இரண்டு படங்களில் எதை முந்தையதாகவும் எதை பிந்தையதாகவும் கொள்வது என்பதில் எந்த அடிப்படையில் தீர்மானித்தார்கள் என்பது தெரியவில்லை). நவராத்திரியின் வெற்றி, முரடன் முத்துவை பாதித்ததில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.

59ல் பந்துலு இயக்கத்தில் வெளியான வெற்றிப்படமான வீரபாண்டிய கட்டபொம்மன் போல 61ல் அவர் இயக்கிய கப்பலோட்டிய தமிழன் வெற்றிபடமாக அமைந்திக்கவில்லை. இருந்தாலும் அதற்கடுத்த வருடம் வெளிவந்த முழுநீள காமெடி படமான பலேபாண்டியா பெரும் வெற்றியைப் பெற்றது (இந்தப் படத்தின் காட்சிகள் அப்படியே லட்டு லட்டாகக் களவாடப்பட்டு தற்போதும் புதிய திரைப்படங்களில் காணக் கிடைக்கின்றன). 64ல் அவரது இன்னொரு பிரம்மாண்டமான படைப்பாக வெளிவருகிறது கர்ணன்ஙு அந்தக் காலகட்டத்தில் இருந்த வழக்கப்படி, அது தமிழோ தெலுங்கோ, கிருஷ்ணன், ராமன் ஆகிய பாத்திரங்கள் என்றால் என்டிராமாராவ்தான் என்கிற மரபு இந்தப் படத்திலும் மீறப்படவில்லை. மாயாபஜார், சம்பூர்ணராமாயணம் ஆகிய படங்களைப் போலவே இதிலும் என்டியார்தான் கிருஷ்ணன். கர்ணனாக சிவாஜி, அர்ஜுனனாக முத்துராமன், துரியோதனனாக எஸ்úஸ அசோகன், சகுனியாக டீயெஸ் முத்தையா என்று பொருத்தமான பாத்திரத் தேர்வாலும் முழுக்க முழுக்க ஹிந்துஸ்தானி அடிப்படையில் அமைந்த விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையாலும் மிக உயரங்களை எட்டிய படம் கர்ணன்.

இதையும் ஒரு படம் அப்படியே தூக்கி விழுங்க வேண்டுமானால் அதையும் பந்துலுதானே இயக்கியாகவேண்டும்! அடுத்த வருடமே வெளிவருகிறது ‘ஆயிரத்தில் ஒருவன்!’

ஹாலிவுட்டில் வெளிவந்த பென்ஹர் முதலான படங்களை அடியொற்றி மிக பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்ட படம் ஆயிரத்தில் ஒருவன்! என்னதான் பின்னாளில் கேசங்கரின் இயக்கத்தில் எம்ஜியார், அடிமைப்பெண் என்று ஒரு படம் கொடுத்திருந்தாலும் எம்ஜியாரின் திரைப்பாதையில் உச்சத்தில் பறக்கிற கொடி ஆயிரத்தில் ஒருவன்தான். அந்தப் படத்திற்கு முன்பே கன்னடத்தில் ஒரு படமும் தமிழில் ஒர படமும் நடித்திருந்தாலும் பின்னாளில் தமிழகத்தின் முதல்வரான ஜெயலலிதா பெரும் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றதும் இந்தப் படத்தின் வாயிலாகத்தான். அவ்வகையில் தமிழகத்தின் இரண்டு பிற்கால அரசியல் ஆளுமைகளை உருவாக்க உதவிய படம் அது என்று சொன்னாலும் மிகையில்லை.

கடல் கொள்ளையர்கள், அடிமை வியாபாரம் என்பதாகவெல்லாம் ஆர்ப்பரிப்போடு வெளிவந்த படம் அது! ஒயிலான நாயகி, நேர்த்தியான விஸ்வநாதனின் இசை, கவித்துவமிக்க கண்ணதாசனின் பாடல்கள் என்று இந்தப்படம் சகல விதத்திலும் வெற்றிப்படமாக அமைந்த ஒன்று. அறுபதுகளில் மட்டமல்ல, தமிழ்த் திரை வரலாற்றிலேயே மிக முக்கியமான படைப்பாகக் கருதப்படும் படம் இது. இதன்பிறகு பந்துலு கன்னடப்படங்களை நோக்கி நகர்ந்துவிட்ட வகையில் பிற்பாடு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இவரது படம் ‘நாடோடி’ மட்டும்தான்!

இந்தக் காலகட்டத்தில் ஏஸிதிருலோகச்சந்தர் இயக்கிய ஒருசில படங்கள் வெளிவருகின்றன. தங்கை, அதே கண்கள், இருமலர்கள், என் தம்பி என்று அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படாத இந்தப் படங்களில் வரிசை 67லிருந்துதான் தொடங்குகிறது. ஆனால் பந்துலுவின் ஆயிரத்தில் ஒருவன் வெளிவந்த அடுத்த வருடமான 66ல், ஏவியெம் தயாரிப்பில் ஏஸிதிருலோகச்சந்தர் இயக்கிய அன்பே வா தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த பொழுதுபோக்குப் படம்ஙு எம்ஜியாரை வைத்துக்கொண்டு இத்தனை லூட்டி அடிக்க முடியும் என்பதை இதற்கு முன்னால் யாராலும் நம்பியிருக்கவே முடியாது. ரஜினிகாந்த்துக்கு ஒரு தில்லுமுல்லு என்று சொன்னால், எம்ஜியாருக்கு ஒரு அன்பே வா! படத்தில் நாகேஷ் மட்டுமல்ல, எம்ஜியார், சரோஜாதேவி உள்ளிட்ட அனைவருமே காமெடியன்கள்தான் என்றுகூட சொல்லலாம். இந்தப்படம் கிட்டத்தட்ட ஸ்ரீதர் பாணியிலேயே அமைந்திருந்த வகையில் என் மனத்தில் வெகுநாட்கள் இது ஸ்ரீதர் படம் என்பதாகவே ஒரு பதிவு இருந்தது. இந்தப் படத்திற்காக ஆரூர் தாஸ் எழுதிய வசனங்கள் வெகுகாலம் ஒலிச்சித்திரமாக வலம் வந்துகொண்டிருந்தவை.

இந்த ஒலிச்சித்திரம் என்கிற வகைமையைக்கூட அறுபதுகளை முன்வைத்துத்தான் கொண்டாட வேண்டும் என்று தோன்றுகிறது. டீவி அறிமுகமாகாத அந்தக் காலகட்டத்தில் வானொலியின் பாணியைப் பின்பற்றி, பாடல்களைப் போலவே திரைப்படங்களின் வசனங்களும் ஒலிப்பேழைகளாக வெளியிடப்படும் வழக்கம் தோன்றியிருந்தது. அதன் நீட்சியாக எழுபதுகளில் டேப்ரிகார்டர்கள் அறிமுகமானபோது இந்த வியாபாரம் கொடிகட்டிப் பறந்தது. ஆனால் கவனித்துப் பார்த்தோமேயானால் எழுபதுகளிலும் ஏன் எண்பதுகளிலும்கூட ஒலிச்சித்திரமாக வெளிவந்த கேஸட்டுகள் அனைத்தும் அறுபதுகளில் வெளிவந்த படங்களினுடையவைதான். அந்த அளவுக்கு அந்தப் படங்களின் பிராபல்யமும், வசன அழகும், இயைந்த இசையமைப்பும் சிறந்து விளங்கின. உதாரணமாக நான் எசசெல்சி படிக்கும்போது எனக்கு மனப்பாடச் செய்யுளாக வந்த ‘கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி…’ எனும் திருவிளையாடற்புராணப் பாடல் எனக்கு மனப்பாடமானது திருவிளையாடல் படத்தின் ஒலிச்சித்திரத்தைத் திரும்பத் திரும்ப கேட்ட வகையில்தான். எழுபதுகளிலும் எண்பதுகளிலும், இந்த அறுபதுகளின் திரைப்படங்களின் வசனங்களை பொது நிகழ்ச்சிகள் துவங்குமுன்பாக ஒலிபரப்புவது சகஜமான வழக்கமாக இருந்தது என்பதையும் இங்கே கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டும்.

தாதாமிராஸி இயக்கிய இரண்டு முக்கியமான படங்களான புதிய பறவை மற்றும் ரத்தத்திலகம் ஆகியவை அறுபதுகளில் வெளிவந்தன. ஆங்கிலத்தில் வெளிவந்த க்ருகட் ஷேடோ எனும் படத்தை உல்டா செய்து எடுக்கப்பட்ட படம் எனும்போதும், புதிய பறவை மிகவும் ஸ்டைலாக எடுக்கப்பட்டிருந்த படம். பாடல்களும் திரைக்கதையும் சிவாஜிகணேசன் மற்றும் சௌக்கார் ஜானகி ஆகியோரின் அசத்தலான நடிப்புமாக இன்றைக்கும் பலராலும் விரும்பிப் பார்க்கப்படும் திரைப்படம் அது. இந்திய சீன யுத்தத்தின் பின்னணியில் தயாரிக்கப்பட்ட ஒரே தமிழ்ப்படம் ரத்தத்திலகம். அந்தப்படத்தில் வெளியான கல்லூரி பிரிவுபசாரப் பாடலான ‘பசுமை நிறைந்த நினைவுகளே…’ இப்போதும் கல்லூரிகளின் கடைசி நாட்களில் ஒலித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தால் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. கண்ணதாசன் இன்னும் காற்றில் மிதந்துகொண்டிருப்பதற்கு இந்தப்பாடலும் ஒரு உதாரணம்!

கிருஷ்ணன் பஞ்சு எனும் இரட்டை இயக்குனர்கள் கொடுத்த உயர்ந்தமனிதன் எனும் உயரிய படம் 68ல் வெளிவருகிறது. சிவாஜிகணேசன் சிவக்குமார் மேஜர் சுந்தரராஜன் ஆகியோர் நடித்த இந்தப்படம் ஒரு ரீமேக் படமென்றபோதும் தனக்கென ஒரு தனித்துவத்தைக் கொண்டதாய் அமைந்திருந்தது. அறுபதுகள் சிவாஜிகணேசனின் மிகை நடிப்பின் துவக்ககாலம் என்கிற வகையில் அவர் நடித்த அற்புதமான படங்களின் வரிசையில் இது மிகவும் முக்கியமான படமாகக் கருதப்படவேண்டியது. டீயெம்சௌந்தர்ராஜன் மூச்சு வாங்கிக்கொண்டு, ‘ஹந்த நாள் ஞாபஹம் நெஞ்ஸிலே வந்ஹதே நண்பனே நண்பனே நண்பனே’ என்று பாடிய அந்தப் பாடலை கொடைக்கானலில் அழகிய லொக்கேஷன்களில் படமாக்கியிருக்கும் நேர்த்தியை இப்போதும் நாம் வியக்கலாம். (இந்தப் பாடல் கண்ணதாசன் எழுதியது என்பதாகவே பலகாலம் நான் நினைத்துக்கொண்டிருந்தேன். உண்மையில் இந்த மாதிரி பல அற்புதமான பாடல்களை இந்தக் காலகட்டத்தில் எழுதியுள்ளார் கவிஞர் வாலிஙு) பாசமென்றும் நேசமென்றும் வீடு என்றும் மனைவி என்றும் நூறு சொந்தம் வந்த பின்னும் தேடுகின்ற அமைதி எங்கே என்று வாழ்வின் உச்சங்களில் வாழும் ஒருவனின் நினைவுப் பாதையில் உள்ள குற்ற உணர்வும் தவிப்புமாக இந்தப் படம் அறுபதுகளில் சிவாஜிகணேசனின் கொடியை வானளாவப் பறக்கவிட்ட படங்களுள் முக்கியமானது.

இதே கிருஷ்ணன் பஞ்சுதான் பாலச்சந்தர் எழுதிய சர்வர் சுந்தரம் படத்தையும் இயக்கினார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இந்தப்படம் 64ல் வெளி வருகிறது. அதற்கு அடுத்த வருடம்தான் பாலச்சந்தர் இயக்குனராக நீர்க்குமிழி மூலம் அறிமுகமாகிறார். இந்த இரண்டு படங்களிலும் நாயகன் மற்றும் திரைக்கதையாளன் ஒரே நபராக இருந்தும் இயக்குனர் என்பவரின் நேர்த்தி என்பதை சர்வர் சுந்தரம்தான் கொண்டிருக்கிறது. இந்தப் படத்துக்கு கவித்துவமான -அவர்களின் பாஷையில் சொன்னால்- டைரக்டோரியல் டச் உண்டு என்பதை நீங்கள் இப்போதும் பார்த்து உணர்ந்துகொள்ள முடியும். அதுவும் இந்த கேயார் விஜயாவின் பேரழகை நீங்கள் தரிசிக்க வேண்டுமானால் அதற்கு முழு உத்தரவாதமான படம் இந்த சர்வர் சுந்தரம். ஸ்ரீதரின் ஊட்டி வரை உறவில் கலர் கேயார்விஜயாவை நீங்கள் பார்க்கலாம், ஆனால் உண்மையில் அவர் மாநிறம் கொண்டவர் என்பதனால் கருப்பு வெள்ளைப் படத்தில்தான் அவரது பேரழகு ஒளிவீச வாய்ப்பாக அமைகிறது.

இயக்குனர் கேசங்கர் பின்னாளில் எம்ஜியார் படங்களையும் பக்திப் படங்களையும் இயக்க ஆரம்பித்த வகையில் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவர் அல்ல என்கிற போக்கு பலரின் மனத்திலும் இருக்கக்கூடும். ஆனால் ஐம்பதுகளின் இறுதியில் இவர் இயக்கிய மருதுபாண்டியர்களின் வரலாற்றைச் சொல்லும் பிரம்மாண்டமான படமான சிவகங்கைச் சீமை, அறுபதுகளில் இவர் இயக்கிய ஆண்டவன் கட்டளை, ஆலயமணி, பாதகாணிக்கை, ஆடிப்பெருக்கு ஆகிய படங்கள் தமிழ் திரைப்பட வரலாற்றின் முத்திரைப் படங்கள். முதல் மூன்று படங்களும் சிவாஜியின் திரைப் பட்டியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த படங்கள் என்றால் ஆடிப்பெருக்கு ஜெமினிகணேசனின் படங்களில் முக்கியமான ஒன்றாக சொல்லப்படவேண்டியது.

இயக்குனர் கேயெஸ் கோபாலகிஷ்ணனின் பங்களிப்பும் அறுபதுகளில் நிறையவே காணப்படுகின்றது. கற்பகம், கை கொடுத்த தெய்வம், சித்தி, செல்வம், கண்கண்ட தெய்வம், பேசும் தெய்வம், குலவிளக்கு என்று இவரது பட்டியல் கிட்டத்தட்ட பீம்சிங்கின் ஏரியாவான சென்ட்டிமென்ட் வகைமையில் நீண்டு கிடக்கிறது.

இயக்குனர் பீமாதவனின் குழந்தைக்காக, வியட்நாம்வீடு, ராமன் எத்தனை ராமனடி ஆகிய படங்கள் இந்தக் காலகட்டத்தில் வெளிவந்தவை. இவற்றில் வியட்நாம்வீடு மேடை நாடகத்தை அப்படியே திரையில் பார்க்கிற வகையிலேயே அமைந்திருந்த ஒன்று. இந்த பாணி பிற்பாடு அல்லது அதே காலகட்டத்தில் பாலச்சந்தரால் பெரிதும் கையாளப்பட்டது. இதை பாணி என்று சொல்வதை விடவும் சினிமா எனும் கலையின் நுட்பத்தை உணராது நாடகங்களை காமிராவில் பதிவு செய்தவை (லோக்கல் லாங்குவேஜில் சொன்னால், ‘video coverage’) என்பதாகவே இந்தப் படங்களைக் கொள்ள வேண்டும். சிவாஜியின் ஷேக்ஸ்பீரியன் பர்பார்மன்ஸை பெரிதும் நம்பி வெளிவந்த படங்கள்தான் இவையெல்லாம். பிற்பாடு 72ல் இவரது இயக்கத்தில் வெளிவந்த ஞானஒளி, நாற்பதுகளில் வெளிவந்த ஏழை படும் பாடு படத்தின் உல்டா என்றபோதும் (அதுவே லே மிஸரபிள்ஸின் உல்டா என்பதால் இது பிழையில்லை) திரும்பவும் ஒருதரம் சிவாஜிகணேசன், மேஜர் சுந்தரராஜன் ஆகியோரின் ஆர்ப்பாட்டத்தைத் திரைக்குக் கொண்டுவந்த சாதனையை நிகழ்த்திய படம். அதேபோல் ஆந்திர நடிகையான அற்புதமான அழகி சாரதாவையும் இந்தப் படத்தில் நீங்கள் ஆசை பொங்கப் பார்க்கலாம்.

இவர்களெல்லாம் ஒருபுறம் இருக்க, பிற்காலத்தில் தமிழ் சினிமாவையும் அதைத் தொடர்ந்து தொலைக்காட்சியையும் ஆளுகை செய்யப் போகிற கே.பாலச்சந்தரின் வருகை அறுபதுகளில் நிகழ்கிறது. 65லிருந்து 70க்குள்ளான ஆறு வருடங்களில் கிட்டத்தட்ட 13 படங்களை அவர் இயக்கியிருக்கிறார். அவர் ஃபுல் த்ராட்டலில்தான் தன் பயணத்தைத் துவக்கினார் என்பதையே இது காட்டுகிறது. இந்தப் பட்டியலில் நீர்க்குமிழி, மேஜர் சந்திரகாந்த், பாமா விஜயம், எதிர்நீச்சல், இரு கோடுகள், காவியத் தலைவி ஆகிய அவரது மிக முக்கியமான படங்கள் அடக்கம். தான் ஒரு வித்தியாசமான இயக்குனர் என்பதை நிரூபிக்கும் விதமாக இவர் -அதாவது தமிழ் சினிமா அதைத் தொடர்ந்து பெரும் மாற்றத்தை எதிர்கொள்ளும் என்பதை உணர்த்தும் விதமாக- சில படங்களை அறுபதுகளில் கொடுக்க முயன்றார். இரு கோடுகள், எதிரொலி போன்றவை அதில் குறிப்பிடத் தக்கவை. இருந்தாலும் எழுபதுகளில்தான் இவரது மூன்று முடிச்சு, அவள் ஒரு தொடர்கதை முதலான படங்கள் வெளிவந்து இவரது வித்தியாசத்தை பார்வையாளர்களுக்கு உணர்த்துகின்றன.

ஏனென்றால் அறுபதுகளில் ரஜினிகாந்த் இல்லை. கமலஹாசன் என்பதாக ஒரு சிறுவன் மட்டுமே காணப்படுகிறான். 60லிருந்து 63க்குள் களத்தூர் கண்ணம்மா, பார்த்தால் பசி தீரும், ஆனந்த ஜோதி என்று மூன்று படங்களில் சிறுவனாக நடித்த கமலஹாசன் வளர்ந்த இளைஞனாக 71ல்தான் நூற்றுக்கு நூறு படத்தில் அறிமுகமாகிறார். இவர்களின் வருகைக்குப் பிறகு தமிழ் சினிமாவின் வரலாறு முற்றிலும் மாறுபட்டுவிடுகிறது.

என்னதான் எம்ஜியார் ஏழைப்பங்காளனாக, அதர்மம் தலைதூக்குமிடத்தில் அவதரிக்கும் லார்ட் கிருஷ்ணாபோல ஜங்கென்று வந்து குதித்து குத்துச் சண்டையிடுபவராக, தாய்க்குலத்தை பெரிதும் மதிப்பவராகவெல்லாம் தனக்கென ஓர் இமேஜை ஏற்படுத்திக்கொள்ள முனைந்தார் என்றாலும் அறுபதுகளில் இந்த ஆட்டமெல்லாம் அத்தனை பலத்தோடு இருந்திருக்கவில்லை. அல்லது நல்ல இயக்குனர்கள் திறமை அல்லது கதை ஆகியவற்றால் அவை இட்டு நிரப்பப்பட்டன.  அதேபோல் சிவாஜி எனும் மேடைக்கலைஞனின் உணர்ச்சிகரமான நடிப்புத் திறமையை மிகைநடிப்பின் அதிகபட்ச சாத்தியங்கள் தோன்றியிராத வகையில் தாங்கிப்பிடித்தவை அறுபதுகளின் படங்கள். இன்னொரு முக்கிய நாயகனான ஜெமினி கணேசனை காதல் மன்னன் என்று அடைமொழி வைத்து அழைக்க ஆரம்பித்த காலகட்டமும் அறுபதுகள்தான். ஐம்பதுகளின் இறுதியில் வெளிவந்த வஞ்சிக்கோட்டை வாலிபன் இவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது என்றாலும், அறுபதுகளில் இவர், சிவாஜி எம்ஜியார் ஆகியோர் நிரவமுடியாத ஒரு தளத்தில் தன் ஆதிக்கத்தைத் செலுத்த ஆரம்பித்த வகையில்தான் இவருக்கு இந்த அடைமொழி நிலைத்தது. ஸ்ரீதராகட்டும், பாலச்சந்தராகட்டும், இவரை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்ட காலகட்டம்தான் இந்த அறுபதுகள் (இதன்பிறகு 90களின் இறுதியில் வெளிவந்த அவ்வைஷண்முகியில்தான் இவரது அற்புதமான ஆற்றல் வெளிப்பட்டது என்பது எனது சொந்தக் கருத்து). ஆனால் எழுபதுகளில் இந்தப் போக்கெல்லாம் கட்டுக்கடங்காமல் போன வகையில்தான் அறுபதுகளின் சினிமாக்கள் அதி உன்னதமாக வரலாற்றில் நினைக்கப்படுகின்றன என்பதை பின்னாளில் வெளிவந்த படங்கள்தான் நமக்கு விளக்குகின்றன.

Advertisements

12 thoughts on “பசுமை நிறைந்த அறுபதுகள்

 1. அங்கதம் குறையாது, சொல்ல வந்ததை சுருதி குறையாமல், கட்டுரை நீளத்தின் அலுப்பு வாசகனுக்குத் தெரிந்துவிடாமல் “அட.. ஆமால்ல..” என்று அடிக்கடி சொல்ல வைத்தீர்கள்! வாழ்த்துகள்!

  1. நன்றி மதன்! ஒருவேளை இந்தியா டுடேயின் அந்த புத்தகம் வெளிவந்திருந்தால் இது போன்ற இன்னும் பல கட்டுரைகள் உங்கள் பார்வைக்கு கிடைத்திருக்கும்.

 2. வணக்கம் நண்பா,

  கோவையை விட்டு நிரந்தரமாக சென்னைக்கு வந்து விட்டீர்களென்று நினைக்கிறேன், வாழ்த்துக்கள். நீண்ட நாள் அர்த்த மண்டபம் காலி மண்டபமாகவே இருந்தது. புது website நேற்றுதான் பார்த்தேன், அற்புதமாக உள்ளது.
  இனி வரிஞ்சு கட்டிட்டு எழுதுவீர்களென்று நம்புகிறேன். வாழ்த்துக்கள்.

  பாலா-சிங்கப்பூர்.
  (செம்புலி ஜெகன்-நினைவிருக்கா?)

  1. நன்றி பாலா. நான் சென்னையை நம்பி வந்துவிட்டது உண்மைதான். சென்னை எப்போது என் மீது நம்பிக்கை வைக்கப்போகிறது என்பதுதான் தெரியவில்லை. புதிய இடத்தில் நிறைய எழுதுவதாகத்தான் உத்தேசம்.

 3. தங்களின் “சினிமாவின் மூன்று முகங்கள்” புத்தகத்தை வாசித்தவன் என்ற முறையில் இந்தக் கட்டுரை என்னைக் கவர்ந்ததில் ஆச்சர்யமேதும் இல்லை. தமிழ் சினிமாவின் முழுப் பரிணாம வளர்ச்சியையும் அறிந்து கொள்ள முயற்சிக்கும் என்னைப் போன்ற இளைய தலைமுறைக்கு இந்தக் கட்டுரை மிகவும் பயனுள்ளதாகி விட்டது.

  1. இந்தியா டுடேக்குதான் இந்த நன்றியை தெரிவிக்க வேண்டும்.

 4. Hi Sudesi,

  Is India Today’s plan cancelled or postponed ??
  Please keep us posted on the India Today’s plans with respect to the release of this special issue.

  Thanks for a wonderful nostalgic article.

 5. நன்றி பாலா. நான் சென்னையை நம்பி வந்துவிட்டது உண்மைதான். சென்னை எப்போது என் மீது நம்பிக்கை வைக்கப்போகிறது என்பதுதான் தெரியவில்லை. புதிய இடத்தில் நிறைய எழுதுவதாகத்தான் உத்தேசம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s